முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், வைகுண்டஏகாதசி பரமபதவாசல் திறப்பு முன்னேற்பாடு: அமைச்சர் சேவூர் ராமசந்திரன் ஆய்வு

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாக திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் விளங்குகின்றது.  இங்கு பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய எம்பெருமான்கள் இத்திருக்கோயிலில் உள்ள பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.  இத்திருக் கோவிலில் மூலவர் அருள்மிகு வேங்கடகிருஷ்ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக சேவை தருகிறார். 

இத்திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வரும் ஜனவரி 8-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. க்யூ வரிசை விபரங்களை சேவார்த்திகள் அறிய திருக்கோயிலினுள் செல்லும் வழிகள், திருக்கோயிலிலிருந்து வெளியேறும் வழிகள் ஆகிய விபரங்கள் அடங்கிய வரைபடம் தென்மாட வீதியில் அமைந்துள்ள திருக்கோயில் நூலகத்தின் அருகில் வைக்கப்படும்.

திருக்கோயிலுக்கு வெளியே கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் பரமபதவாசல் சிறப்பு நிகழ்ச்சிகளை சேவார்த்திகள் கண்டு களிக்கும் வண்ணம், அகண்ட எல்.இ.டி திரைகள் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சியின் மூலம் அனைத்து சுகாதாரப் பணிகளும், அவசர உதவிக்காக சிறப்பு மரத்துவக் குழுக்களும் செயல்படும். சேவார்த்திகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.  சேவார்த்திகளின் வசதிக்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் மற்றும் தென்னக ரயில்வே மூலம் சிறப்பு ரயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும். சேவார்த்திகளின் பாதுகாப்புக்காக நான்கு மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்படும்.  திருக்கோயில் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும்.

சேவார்த்திகள் முறை வரிசையில் செல்ல புதியதாக ஸ்டெயின்லேஸ் ஸ்டீல் கம்பிகளால் வரிசைகள் கூடுதலாக அமைக்கப்படும்.  திருக்கோயில் உள் பகுதி மற்றும் வெளிப்பகுதியில் மின் அலங்காரம் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட உள்ளது.  திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகளுக்கு இலவசமாக லட்டு பிரசாதமாக வழங்கவும், கீதை சுலோகம், சாராம்சம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் நாமாவளி அடங்கிய புத்தகம் திருக்கோயில் வளாகத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.

திருக்கோயிலுக்கு வருகின்ற சேவார்த்திகளுக்கு திருக்கோயில் மூலமாக திருக்கோயிலின் வரலாறு அடங்கிய சிற்றட்டை அருள்மிகு ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் படம் அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம், கற்கண்டு ஆகியவை வழங்கப்பட உள்ளது. 

மேற்கண்டவாறு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முனைவர் மா.வீரசண்முகமணி அவர்கள், இத்திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர், துணை ஆணையர்/செயல் அலுவலர் த.காவேரி, துறை அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வரும் ஜனவரி 8-ம் தேதி வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி நிரல்.
அதிகாலை 2.30 மணிக்கு  மூலவர் முத்தங்கி சேவை

(ரூ.300/- டிக்கட் மற்றும் பேட்ஜ் உள்ளோர் திருக்கோயிலினுள் மேற்கு கோபுர வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுதல்.   அதிகாலை 2.30 –அதிகாலை 2.45 மணிவரை  உற்சவர் மகா மண்டபத்தில் அலங்காரம்.  அதிகாலை2.45 – 4.00மணி மகா மண்டபத்தில் உற்சவர் வைர அங்கி சேவை.  அதிகாலை 4.00 மணி உற்சவர் ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி மகா மண்டபத்திலிருந்து உள்புறப்பாடு துவங்குதல்.  அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் திறப்பு - நம்மாழ்வாருக்கு காட்சி தருதல்.  அதிகாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரை  வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை, வேத திவ்யப்பிரபந்தம் துவங்குதல்.   அதிகாலை5 – 5.10மணி வரை பரமபத வாசலில் உபயதாரர் மரியாதை மற்றும் தரிசனம்.  அதிகாலை 5.10 மணி முதல் 5.45 மணி வரை திருவாய்மொழி மண்டபத்தில் 3 சுற்றுக்கள் உற்சவர் பத்தி உலா நடைபெற்று திருவாய்மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில் வைர அங்கியுடன் உற்சவர் எழுந்தருளி சேவை சாதித்தல்.  

அதிகாலை 5.45 மணி திருவாய்மொழி மண்டபத்தில் சேவார்த்திகள் உற்சவரை சேவித்து விட்டு வெளி வருதல்.  காலை 6.00 மணி முதல் நள்ளிரவு வரை சேவார்த்திகள் சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.100/- பின்கோபுர வாசல் வழியாகவும் மற்றும் கட்டணமின்றி பொது தரிசனம் முன் கோபுர வாசல் வழியாகச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.   காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை  மேற்கு கோபுர வாயில் வழியாக கட்டணமின்றி பரமபதவாசலைக் கடந்து உற்சவரை திருவாய்மொழி மண்டபத்தில் சேவித்து, கிழக்கு கோபுர வாயில் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இரவு 10.00 மணிக்கு  உற்சவர் அலங்கார திருமஞ்சனம்  இரவு 12.00 மணிக்கு  நம்மாழ்வாருடன் பெரிய மாட வீதியில் திருவீதி உலா.  09.01.2017 முதல் 16.01.2017 முடிய மாலை 5.45மணிக்கும், 11.01.2017 காலை 10.00 மணி மற்றும் 17.01.2017 காலை 9.30 மணிக்கும் பரமபதவாசல் சேவை நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்