முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு சம்பவம் : அமீரக துணை பிரதமர் உயிர் தப்பினார்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், அமீரக துணை பிரதமர் மற்றும் அவரது குடும்பத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வேட்டையாட வருகை
அமீரக துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான், பறவைகளை வேட்டையாடுவதில் தேர்ச்சி பெற்றவர். இதன் காரணமாக பாகிஸ்தானில் நடைபெறும் ஹூப்ரா பறவை மற்றும் கழுகு வேட்டைக்காக குடும்பத்துடன் சென்றுள்ளார்.

திடீர் துப்பாக்கி சூடு
பறவை வேட்டை நடக்கும் பாகிஸ்தானின் தெற்கு மாகணமான பலுசிஸ்தான் குச்சாக் பகுதியில் உள்ள பாஞ்குர் என்ற இடத்திற்கு அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் அமீரக துணை பிரதமர் ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான் சென்றார். அங்கு பறவைகள் கூடும் பகுதியில் அனைவரும் நின்று பறவைகளை பார்த்துக்கொண்டு இருந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம மனிதர்கள் 10 பேர் அந்த பகுதியை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட ஆரம்பித்தனர். உடனே அரச குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் தரையில் படுத்து கொண்டனர்.

உயிர் தப்பினர்
துப்பாக்கிச் சூடு நடக்கும் சத்தம் கேட்டதும் சிறிது தூரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாகிஸ்தான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களை நோக்கி பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் சரமாரியாக சுடத்தொடங்கியதும் மர்ம மனிதர்கள் 10 பேரும் மின்னல் வேகத்தில் தலைமறைவாகி விட்டனர். நல்லவேளையாக அமீரக துணை பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் உயிர் தப்பினர் என்று பாகிஸ்தான் போலீஸ் மற்றும் வெளியுறவுத்துறை அறிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்