முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியாபாரிகள் ஆர்வத்தால் வங்கிகளில் ‘ஸ்வைப்பிங் மெஷின்’ ஆர்டர் அதிகரிப்பு

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை  - பண மதிப்பு நீக்க அறிவிப்பினால் கடைகளில் வியாபாரம் குறைந்து விட்டதால், வணிக நிறுவனத்தினர் ‘ஸ்வைப்பிங் மெஷின்’ வாங்க ஆர்வம் காட்டி வருவதால், வங்கிகளுக்கு ஆர்டர் குவிந்து வருகிறது.  நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பு நீக்கம் செய்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் மக்கள் கைகளில் வைத்திருந்த பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களில் டெபாசிட் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பணப்புழக்கம் குறைந்துவிட்டது:
இதனால், மக்களிடம் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் பெறுவது மிகவும் சிரமமான செயலாகிவிட்டதால், கையிருப்பில் உள்ள சிறு தொகையை அத்தியாவசியப் பொருட்களை வாங்க மட்டுமே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான மக்களின் இந்த மாற்றத்தால், சிறு கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை தினசரி வர்த்தகம் 60 சதவீதம் வரை குறைந்துவிட்டது. மேலும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு சில்லரை கொடுக்க முடியாமல் கடைக்காரர்கள் திணறி வருகின்றனர்.

டெபிட் கார்டு  மூலமே வியாபாரம் :
பெரும்பாலான மக்களிடம் தற்போது டெபிட் கார்டு இருப்பதால், அவற்றைப் பயன்படுத்தி பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இதுநாள் வரை டெபிட் கார்டுகளில் பில் தொகையை வசூலிக்கக்கூடிய ‘ஸ்வைப்பிங் மெஷினை’ வாங்காமல் இருந்த கடைக்காரர்கள் தற்போது, ‘ஸ்வைப்பிங் மெஷினை’ வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதன்காரணமாக, வங்கிகளிடம் இருந்து ‘ஸ்வைப்பிங் மெஷின்’ வாங்குவதற்கு வியாபாரிகள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வியாபாரிகள் பலர் ‘ஸ்வைப்பிங் மெஷின்’ தேவை என்று கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இதுவரை 200 ‘ஸ்வைப்பிங் மெஷின்கள்’ வரவழைக்கப்பட்டு வியாபாரி களுக்கு கொடுத்துள்ளோம். மேலும், 200 பேர் விண்ணப்பித்துள்ளனர். எனினும், எல்லா மாவட்டங்களிலும் ‘ஸ்வைப்பிங் மெஷின்’ தேவை அதிகரித்துள்ளதால், அவற்றை வரவழைத்துக் கொடுப்பதில் சற்று அவகாசம் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தவிர இதர தேசிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளிலும் வர்த்தகர்கள் ‘ஸ்வைப்பிங் மெஷின்கள்’ கேட்டு அதிகளவில் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்