திருவொற்றியூரில் வீட்டில் வைத்து புதிய திரைப்படங்களின் போலி டிவிடிக்கள் தயாரித்த நபர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      சென்னை

சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்தில் திரைக்கு வந்த புதிய தமிழ் திரைப்படங்களை உரிமம் பெறாமல் டிவிடிக்களில் தயாரிப்பவர்களையும், அவற்றை பர்மா பஜார் மற்றும் சென்னை மாநகரில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும் கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவ`ல் ஆணையாளர் .ஜார்ஜ்,உத்தரவிட்டார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு, திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் மேற்பார்வையில், திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை கொண்ட காவல் குழுவினர் சென்னையில் தீவிர சோதனைகள் மேற்கொண்டு, போலியான முறையில் டிவிடிக்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் வியாசர்பாடி, புளியந்தோப்பு மற்றும் பெரம்பூர் பகுதிகளில் கண்காணித்து வந்தபோது, புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை, பின்னி மில் பேருந்து நிறுத்தம் அருகே பையுடன் சந்தேகப்படும்படி நடந்து வந்துக் கொண்டிருந்த நபரை மடக்கி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். மேலும், சந்தேகத்தின்பேரில் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் உரிமம் பெறாத புதிய தமிழ் திரைப்படங்களின் போலி டிவிடிக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

அதன்பேரில், போலி டிவிடிக்கள் வைத்திருந்த குற்றவாளி நல்ல இப்ராஹிம் (40)திருவொற்றியூர் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், குற்றவாளி நல்ல இப்ராஹிம் மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு உயர்ரக ரைட்டிங் மிஷின்கள் மூலம் உரிமம் பெறாத புதிய தமிழ் திரைப்படங்கள், இதர தமிழ் திரைப்படங்கள் மற்றும் ஆங்கில படங்களை போலி டிவிடிக்களாக தயாரித்து, புளியந்தோப்பு, பெரம்பூர், பர்மா பஜார், ரத்தன் பஜார் மற்றும் இதர இடங்களில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.போலீஸார், மேற்படி வீட்டில் சோதனை மேற்கொண்டு, அங்கு போலி டிவிடிக்கள் தயாரிக்க பயன்படுத்திய 7 உயர்ரக ரைட்டிங் மிஷின்கள், அவற்றைக் கொண்டு தயாரித்த சமீபத்தில் திரைக்கு வந்த புதிய தமிழ்த் திரைப்படங்களான கத்தி சண்டை, பலே வெள்ளைய தேவா, கவலை வேண்டாம், வீர சிவாஜி, சைத்தான், மாவீரன் கிட்டு மற்றும் இதர தமிழ் பட டிவிடிக்கள், ஆங்கிலப் பட டிவிடிக்கள் மற்றும் பதியப்படாத டிவிடிக்கள் என மொத்தம், 2,635 டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட சொத்தின் மதிப்பு சுமார் ரூ.16.4 லட்சம் ஆகும்.கைது செய்யப்பட்ட நல்ல இப்ராஹிம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: