வங்கிகளில் பணம் எடுக்க தற்போது உள்ள கட்டுப்பாடு அடுத்த மாதமும் நீடிக்கும் : வங்கி அதிகாரிகள் தகவல்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      வர்த்தகம்
cash withdrawal(N)

மும்பை   -உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து ஏற்பட்ட பணப்பற்றாக்குறை காரணமாக வங்கிகளில் இருந்து பொதுமக்கள், வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு அடுத்த மாதமும் தொடரும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருப்புபணத்தை ஒழிக்க உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு கடந்த மாதம் 8 ஆம் தேதி அறிவித்தது. இதனைத்தொடர்ந்து மக்கள் தங்கள் வசம் இருந்த பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை தேவைக்கேற்ற அளவுக்கு உரிய நேரத்தில் அச்சடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 12 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளன. இதேவேளையில், ரிசர்வ் வங்கியில் இருந்து கடந்த 19 ஆம் தேதி வரை மொத்தம் 5 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குதான், புதிய இரண்டாயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இதனால் வங்கிகளில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டு ரிசர்வ் வங்கி அறிவித்தபடிவாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கூட பணம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக வங்கிகளில் பணப்பற்றாக்குறை தீர எந்தவழியும் இல்லாததால், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் கட்டுப்பாடு அடுத்த மாதமும் தொடர்ந்து நீடிக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்: