முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளைக் கேவலமாகப் பேசுவதா? நடிகை நயன்தாரா கடும் கண்டனம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      சினிமா
Image Unavailable

சென்னை, கத்தி சண்டை படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சிகரமாக நடித்தது ஏன் என்பதற்கு அப்பட இயக்குநர் சுஜார் அளித்த விளக்கத்துக்கு நடிகை நயன்தாரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுராஜ், கத்தி சண்டை படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சியாக நடித்தது ஏன் என்பதற்கு ஒரு பேட்டியில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

நாங்கள் லோ கிளாஸ் ரசிகர்கள். ஹீரோ சண்டை போடுவதற்கும் ஹீரோயின் கவர்ச்சியாக நடிப்பதற்குமே ரசிகர்கள் பணம் கொடுத்துப் படம் பார்க்கிறார்கள். நடிகைகளும் கோடிகளில் பணம் வாங்குகிறார்கள். எனவே ஒரு நடிகை, புடவை கட்டி மூடி நடிப்பதை நான் விரும்பமாட்டேன். மக்கள் இலவசமாக அல்ல, பணம் கொடுத்து படம் பார்க்கிறார்கள். கமர்ஷியல் படங்களில் கதாநாயகி கவர்ச்சியாகவே நடிக்கவேண்டும். என்னுடைய காஸ்ட்யூம் டிசைனர், நடிகையின் உடையை அவருடைய முழங்கால் வரை இருப்பதுபோல கொண்டுவந்தால் நான் அந்த உடையின் உயரத்தைக் குறைக்கச் சொல்வேன். இல்லை, இதனால் நடிகை வருத்தப்படுவார் என்று சொன்னாலும் நான் சொன்னபடி உடையை மாற்றவைப்பேன். ரசிகர்கள் இதுபோன்ற உடைகளில் நடிகைகளைக் காணவே விரும்புகிறார்கள். நடிகைகள் தங்கள் நடிப்புத் திறமையை டிவி சீரியல்களில் காண்பித்துக்கொள்ளலாம் என்று பேட்டியளித்தார்.

சுராஜின் இந்தப் பேட்டிக்கு நடிகை நயன்தாரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த ஒரு பேட்டியில் இதுகுறித்து கூறியதாவது:-

திரையுலகின் பொறுப்பான நபர் ஒருவர் எப்படி இந்தளவுக்குக் கேவலமாகப் பேட்டியளிக்கமுடியும்? இதுபோன்ற கேவலமான கருத்துகளை இயக்குநர் சுராஜ் எப்படிக் கூறலாம்? பணம் கொடுத்தால் ஒரு நடிகை ஆடை அவிழ்த்து நடிப்பார் என்று நினைத்துவிட்டாரா? அவர் குடும்பத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி இப்படிக் கூறுவாரா?பெண்கள் முன்னேற்றம் குறித்து பிங்க், டங்கல் போன்ற படங்கள் வந்துகொண்டிருக்கும்போது எந்தக் காலத்தில் இருந்துகொண்டு இயக்குநர் சுராஜ் இதுபோல பேசுகிறார்? ஒரு நடிகை கவர்ச்சியாக நடிக்கிறார் என்றால் அவர் அதில் செளகரியமாக உள்ளார் என்பதும் கதைக்குத் தேவைப்படுவதாலும்தான்.கதாநாயகியை மோசமாகக் காண்பிப்பதைப் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று அவர் எந்த ரசிகர்களைச் சொல்கிறார்? நம் நட்சத்திரங்களை சுராஜை விடவும் பக்குவத்துடனும் மரியாதையுடனும் ரசிகர்கள் அணுகிறார்கள். நானும் கவர்ச்சியாக நடித்துள்ளேன். ஆனால் குறிப்பிட்ட லோ கிளாஸ் ரசிகர்களை அப்பட இயக்குநர் திருப்திப்படுத்துவதற்காக அல்ல. அப்படி நடிப்பது என் விருப்பமாக இருந்ததால். கதாநாயகிகளை எப்படி வேண்டுமானாலும் நடிக்கவைக்கலாம் என யாரும் எண்ணிவிடக்கூடாது என்று நயன்தாரா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்