முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாநகராட்சிப் பகுதி மக்கள் புகைப்படத்துடன் கூடிய நிலப் பட்டா பெறலாம் கலெக்டர் தகவல்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      ஈரோடு

 

ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகைப்படத்துடன் கூடிய நிலப் பட்டா பெறலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து, அவர் விடுத்த செய்தி தமிழக அரசால் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் அரசாணையின்படி வருவாய் பின்தொடர் பணியின்கீழ் வருவாய் பதிவேடுகளில் இந்நாள் வரையிலான பதிவுகளை சரிசெய்து நில உரிமையாளர்களுக்கு ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

 

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பட்டா பகுதிகளில் கிரயம், பூர்வீகம் மூலமாக பாத்தியப்பட்ட வீடுகள், மனைகள், விவசாய நிலங்களுக்கும், நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதில், நகர நிலவரித் திட்ட அலகு 2-இல் இப்பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.

 

இதுவரை 10 ஆயிரத்து 231 பட்டாக்கள்

இத்திட்டத்தில் வழங்கப்படும் பட்டாக்கள் இனிவரும் காலங்களில் முக்கிய ஆவணமாகக் கருதப்படும் என்பதால் இதுவரை பட்டா பெறாதவர்கள் தங்கள் சொத்துக்குரிய ஆவணங்களை ஈரோடு காந்தி சாலையில், தீயணைப்பு நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வரும் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியரிடம் ஆஜர்படுத்தி இத்திட்டத்தின் மூலமாக புகைப்படத்துடன் கூடிய பட்டா பெற்று பயனடையலாம். ஈரோடு மாநகராட்சியில் இதுவரை 10 ஆயிரத்து 231 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 11 ஆயிரத்து 303 நபர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால் பட்டா வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, விசாரணைக்கு ஆஜராகாத நபர்கள் உரிய ஆவணங்களுடன் மேற்கண்ட முகவரியில் செயல்படும் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியரை அணுகி பட்டா பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்