முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு சோலாரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மாநகராட்சி ஆணையர் தகவல்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      நீலகிரி
Image Unavailable

 

-சோலாரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி மத்திய அரசின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ஸ்வச் செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, சுகாதாரம் தொடர்பான புகார்கள் அளிக்கலாம். ஈரோடு மாநகராட்சி இந்த ஆண்டு இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக புகார் அளிக்கப்பட்ட 12 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 200 புகார்கள் வந்ததில் உடனடியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது.

3 ஆயிரம் தனிநபர் கழிப்பிடங்கள் கட்ட நடவடிக்கைகள்

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் கழிப்பிடம் கட்ட மத்திய, மாநில அரசுகளின் மானியத்தோடு ரூ. 8 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன்படி 3 ஆயிரம் தனிநபர் கழிப்பிடங்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் மரப்பாலத்தில் ஆடுவதைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாள்களுக்கு அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி குழு ஆய்வு செய்து சில பரிந்துரைகள் செய்துள்ளது. தற்போது மாநகராட்சிப் பகுதியில் மாடுவதைக் கூடம் இல்லாததால் சாலையோரங்களில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுகிறார்கள்.ரூ.

3 கோடி மதிப்பீட்டில் 42 வீடுகள்

முதல்கட்டமாக பெரியஅக்ரஹாரம் பகுதியில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் மாடுவதைக் கூடம் கட்டப்படவுள்ளது. மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு வெள்ளப்பாறை என்ற இடத்தில் 50 சென்ட் இடத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் 42 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. குளத்தை தூர்வாருவதற்காக நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. தனியார் பங்களிப்போடு குளத்தை தூர்வாருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவின்பேரில் சூளை பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதன் பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளப்படவுள்ளது.

 

ரூ. 14 கோடியிலும் தூர்வாரப்படவுள்ளது

இந்தப் புதிய தொழில்நுட்பம் மூலமாக கழிவுநீர் முழுமையாக சுத்தமானால் தேவையான இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட இரட்டைப்பாளி குளம் ரூ. 11 கோடியிலும், முத்தம்பாளையம் குளம் ரூ. 3 கோடியிலும் தூர்வாரப்படவுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின்படி ஈரோடு அருகே சோலார் பகுதியில் புதியதாக பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். பேட்டியின்போது, மாநகரப் பொறியாளர் (பொ) சுகந்தி, உதவி ஆணையர்கள் விஜயகுமார், ஆறுமுகம், மாநகராட்சி நகர் நல அலுவலர் சுமதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்