முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் கழிவுநீரைச் சுத்திகரிக்காமல் வெளியேற்றிய 7 ஆலைகளின் மின் இணைப்புத் துண்டிப்பு

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      ஈரோடு

 

கழிவுநீரைச் சுத்திகரிக்காமல் வெளியேற்றியதாக 7 சாய, சலவை மற்றும் தோல் ஆலைகளின் மின் இணைப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

 

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாயம், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பூஜ்ய சதவீதம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 4.7.2007, 9.8.2007 ஆகிய தேதிகளில் வழங்கிய தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.

 

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து சாயம் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பூஜ்ய சதவீதம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவியுள்ளனவா என்பது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தீவிர ஆய்வு செய்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழு விடுமுறை நாள்களில் (டிசம்பர் 24, 25) இரவில் ஆய்வு செய்துள்ளனர்.

 

அப்போது, ஈரோடு வட்டத்தில் உள்ள தண்ணீர்பந்தல்பாளையம், ராசாம்பாளையம், வெட்டுக்காட்டுவலசு, பி.பி.அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த 4 சாய, சலவை மற்றும் பிரிண்டிங் ஆலைகளும், 3 தோல் தொழிற்சாலைகளும் விதிகளை மீறி, கழிவுநீரைச் சுத்திகரிக்காமல் நீர்நிலைகளில் வெளியேற்றியது கண்டறியப்பட்டது.

 

அதன் அடிப்படையில், அந்தத் தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, தவறிழைக்கும் தொழிற்சாலைகளின் மீது குற்றவியல் நடவடிக்கை உள்பட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் தோல், சாயம், சலவை, பிரிண்டிங் தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வாரிய விதிகளுக்கு உள்பட்டு முறையாக இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்