முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டையொட்டி திருக்கோவில்களில் சிறப்பு பூஜை

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      நீலகிரி

புத்தாண்டையொட்டி ஊட்டி கோவில்களில் சிறப்பு பூஜையும், தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

                                    நீண்ட வரிசை

நேற்று ஆங்கில புத்தாண்டு 2017  பிறந்தது. புத்தாண்டையொட்டி ஊட்டியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் காலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். புத்தாண்டை முன்னிட்டு மாரியம்மன் திருக்கோயிலில் அதிகாலை 4.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.

                                சிறப்பு பஜனை

அதேபோல் ஊட்டி ராஜ்பவன் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு குப்பனேஸ்வரர், சனீஸ்வரர் ஆலயத்தில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் சிறப்பு பஜனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு ஆலயத்தில் அமைந்துள்ள விநாயகர், ஆதிபராசக்தி, துர்க்கை, ஸ்ரீ ஐயப்பன், பாலமுருகன், ஆஞ்சநேயர், நாகராஜர், நவக்கிரகம் மற்றும் குப்பனேஸ்வரர், சனீஸ்வர பகவான் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. இப்பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் அனைத்து கோவில்களிலும் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டையொட்டி அனைத்து திருக்கோயில்களிலும் காலை முதலே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

                              தேவாலயங்கள்

அதேபோன்று புத்தாண்டை முன்னிட்டு ஊட்டியில் உள்ள அனைத்து கிறிஸ்துவ தேவாலங்களிலும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். மேலும் பல்வேறு தங்கும் விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதனையொட்டி சிறப்பு விருந்துகள் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசு வெடி சப்தத்துடன் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்