தென்காசி,
குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நெல்லை மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் ஆண்டு தோறும் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா 2ம் தேதி துவங்கியது. காலை 5.20 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன் அருள் பாலித்தனர். பின்னர் கொடிமரத்திற்கு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு கொடிபட்டம் கட்டி கொடியேற்றம் செய்யப்பட்டது. மேள தாளம் முழங்க கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை, காலை, மாலையில் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை, இரவு சப்பர பவனி நடந்தது. வரும் 11ம் தேதி வரை தினமும் காலை, மாலை சிறப்பு அபிசேக, அலங்கார தீபாராதனை, நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை, சப்பர பவனி நடக்கிறது.
வரும் 5ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு, 6ம் தேதி காலை நடராஜர் மற்றும் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. 9ம் தேதி காலை சித்திரசபையில் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, 11ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்ரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை, 5 மணிக்கு மேல் கோயில் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
தென்காசி குலசேகரநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா துவங்கியது. 10ம் தேதி வரை தினமும் காலை திருவெம்பாவை, சிறப்பு தீபாராதனை, இரவு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 11ம் தேதி அதிகாலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, சிறப்பு அபிசேகம், தாண்டவ தீபாராதனை நடக்கிறது.