முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் சொத்து விவரங்களை வெளியிட்டார்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

பட்னா  - பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்கள் புத்தாண்டின் முதல் நாளில், தங்களின் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் விவரங்களை வைத்துப் பார்க்கும்போது அவர் தன் மகன் நிஷாந்தை விட வசதி குறைவானவராக இருக்கிறார்.

  மகனை விட  வசதி குறைவு :
ரொக்கப் பணம், வங்கியிருப்புத் தொகை, ஃபோர்ட் கார், பசுக்கள், கன்றுகள், இரு சக்கர வாகனம் மற்றும் டெல்லியில் உள்ள ஒரு பிளாட் ஆகியவற்றோடு ரூ.86 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளதாகக் கணக்கு காண்பித்துள்ளார் நிதிஷ். அதேவேளையில் அவரது மகனிடம் ரூ.2.36 கோடி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பிகார் மாநிலத்தின் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவிடம் வாகனங்கள் எதுவும் இல்லை. ஆனால் வீட்டு மனைகள் உள்ளன.

 லல்லுமகனுக்கு மனைகள் :
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லல்லு பிரசாத் யாதவ் இளைய மகனின் பெயரில் தனப்பூர், கார்டனிபாக் மற்றும் பாட்னாவுக்கு அருகில் உள்ள பகுதியில் அவருக்கு பெரியளவில் நில மனைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லல்லு பிரசாத்தின் மூத்த மகனும், பிகாரின் சுகாதாரத்துறை அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் வாகனங்களை வைத்துள்ளார். அவரிடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பைக், ரூ.28 லட்சம் மதிப்புள்ள கார் உள்ளன. அதேநேரம் அவரிடத்தில் ரூ.3 லட்சம் மட்டுமே வங்கியிருப்பாக உள்ளது.

சொகுசு கார்கள்:
நிதிஷ் குமாரின் கேபினட் சகாக்கள் சொகுசு கார்கள், நில மனைகள், ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்களையும் வைத்துள்ளனர். மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஒரு பிஸ்டல் மற்றும் ஒரு ரைஃபிள் வைத்துள்ளார். ரூ.7.3 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ.1 கோடி வங்கிக் கையிருப்பும் அவரிடத்தில் உள்ளது. மாநிலத் தலைநகர் ஒன்றில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் சொந்தமாக ஒரு கடை வைத்துள்ளார். அதேபோல வேளாண்மைத்துறை அமைச்சர் ராம் விச்சார் ராயிடம் ஒரு பிஸ்டல் மற்றும் ஒரு ரைஃபிள் உள்ளது. அவரின் வங்கிக்கணக்கில் ரூ.24 லட்சம் ரொக்கம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

ஆபரண விபரங்கள்:
அமைச்சர்களிடம் உள்ள நகை மற்றும் ஆபரண விவரங்களும் வெளியாகியுள்ளன. மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஷ்ரவண் குமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வைத்துள்ளார். அவரின் மனைவியிடம் ரூ.2 லட்சம் மதிப்பில் நகைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் 6.10 கிலோ வெள்ளி, 100 கிராம் தங்கம் வைத்திருப்பதாகவும், அவரின் மனைவி 455 கிராம் தங்கம் மற்றும் 2.25 கிலோ வெள்ளி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அத்தோடு பாட்னா மற்றும் வைஷாலி மாவட்டங்களில் நில மனைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் பிகார் அமைச்சர்கள் தங்களின் மனைவியைக் காட்டிலும் வங்கியிருப்பு, நகை மற்றும் பணம் உள்ளிட்ட சொத்துகளை குறைவாகவே வைத்துள்ளனர்.

முன்னதாக 2010-ல் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், அவரும் அவரின் அமைச்சர்களும் தங்களின் சொத்து விவரங்களை ஆண்டுக்கொரு முறை வெளியிட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்