முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணையத்திற்கு முலாயம் சிங் சென்றார் : சைக்கிள் சின்னத்திற்கு உரிமை கோரினார்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

 புதுடெல்லி  -  உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சி செய்யும் சமாஜ் வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கிற்கும் , அவரது மகனும்  அகிலேஷ் யாதவுக்கும் இடையே கருத்துவேறுபாடு அதிகரித்துள்ள நிலையில் கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு உரிமை கோரி  முலாயம் சிங் நேற்று திடீரென்று தேர்தல் ஆணையத்திற்கு சென்றார்.
 உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது முலாயம் சிங்கின் சமாஜ் வாதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி பதவியேற்று 5 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு   சமாஜ் வாதி ,  பகுஜன் சமாஜ் , பா.ஜ.க. காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடுமையாக போட்டியிட தயாராகியுள்ளன.

இந்த நிலையில் சமாஜ் வாதியின் தலைவர் முலாயம் சிங்கின் மகனும் முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும், கட்சியின் மாநில தலைவரும், அகிலேஷின் சித்தப்பாவுமான சிவ்வபால் யாதவுக்கும் கடுமையாக  வாக்குவாதம் தொடர்ந்தது . இதனால்  அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள் பலருக்கும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சிவ்பால் வாய்ப்பு தரவில்லை.  தற்போது எம்.எல்.ஏவாக  50 பேர் அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் என்ற முறையில் அவர்கள் கட்சி சார்பில்  வரும் தேர்தலில் போட்டியிட அனுமதி தரப்படவில்லை. இதனால் முதல்வர் அகிலேஷ் யாதவ் கட்சியின் தலைவரும் தனது தந்தையுமான முலாயம் சிங்கை சந்தித்து அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையே அகிலேஷ் யாதவ் அதிரடியாக சமாஜ் வாதி கட்சியின் தேசிய கூட்டத்தை கூட்டினார். அந்த கூட்டத்திற்கான அழைப்பை கட்சியின் மூத்த தலைவரும் முலாயமின் சகோதருமான ராம் கோபால் யாதவ் கூட்டியிருந்தார். இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும்  பெருமளவில் கலந்து கொண்டார்கள். முலாயம் சிங்கிற்கு ஆதரவான முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டார்கள். இதில்  கட்சியின் புதிய தேசிய தலைவராக  அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். மேலும் தற்போது மாநிலத்தின் சமாஜ் வாதி கட்சியின் தலைவராக செயல்படும் முலாயம் சிங்கின் சகோதரர் சிவ்பால் யாதவையும், அமர் சிங்கையும் நீக்குவதாக  இந்த தேசிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு குறித்து முலாயம் சிங் அதிர்ச்சி அடைந்து இந்த தேசிய கூட்டம் சட்ட விரோதமானது என்று அறிவித்தார்,

இதனையடுத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ராம் கோபால் யாதவை நீக்குவதாகவும் அறிவித்தார்.இதற்கிடையே முலாயம் சிங் தரப்பில் கட்சி  நிர்வாகிகள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தை மாநில தலைவர் சிவ்பால் யாதவ் திடீரென ரத்து செய்தார்.  இதற்கான காரணம்  தெரிவிக்கப்படவில்லை. ஆனால் குறிப்பிட்ட கட்சி தகவல்படி , கூட்டத்திற்கு  அதிக அளவில் தலைவர்கள் வராததால் கூட்டம் ரத்தானது என தெரிய வந்தது.  தற்போது  தான் உருவாக்கிய சமாஜ் வாதி கட்சியில் தனக்கே மரியாதை இல்லையே என கொந்தளித்த முலாயம் சிங் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னம்  தங்களுக்கே உரிமை உள்ளது என கோரி தேர்தல் ஆணையரை நேற்று டெல்லியில் சந்தித்தார்.

 தேர்தல் ஆணையரை முலாயம் சிங் சந்தித்த தகலை சிவ்பால் யாதவ் ட்விட்டர் தகவலில் தெரிவித்தார். உ.பி மாநிலத்தில் மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில்  325 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முலாயம் சிங்கும், சிவ்பால் யாதவும் கடந்த புதன் கிழமையன்று அறிவித்தார்கள். அந்த வேட்பாளர்கள்  பட்டியலில்  தற்போது பதவியில் உள்ள அகிலேஷ் ஆதரவாளர்களான 50 எம்.எல்.ஏக்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் அகிலேஷ் யாதவ் , முலாயம் சிங் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.நான் எனது தந்தையை மதிக்கிறேன். கட்சிக்கும் , குடும்பத்திற்கும் எதிராக உள்ள நபர்களை எதிர்த்தே போராடுகிறேன் என அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்