பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள நீர்நிலைகளின் தரத்தை பரிசோதனை செய்து நீரின் தரம் மேலும் வளம்பெற ஆவன செய்ய வேண்டும் அமைச்சர் கே.சி.கருப்பணன் உத்தரவு

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      ஈரோடு
2 1 2016 ph 5

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வரப்பாளையம் கிராமத்தில் நேற்று (02.01.2017) ஓடைக்காட்டூர் ஏரி மற்றும் பெருந்துறை சிப்காட் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்) பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை, மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தலைமையில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்  ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

          பெருந்துறை சிப்காட் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்) வளாகத்தில் உள்ள நீர்நிலைகள் தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மனுவினை தொடர்ந்து,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்  சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓடைக்காட்டூர் ஏரியில் நேரடியாக துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.

          ஓடைக்காட்டூர் ஏரி தூர்வாரப்படும் பணி, சிப்காட் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்) பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கிணறுகள் போன்றவற்றை ஆய்வு செய்து நீரின் தரத்தை பரிசோதனை செய்து நீரின் தரம் மேலும் வளம்பெற ஆவன செய்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்திரவிட்டார். மேலும் சிப்காட் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்) வளாகத்தில் இயங்கிவரும் கே.பி.ஆர். மில்ஸ் லிட் எனும் சாய தொழிற்சாலையை ஆய்வு செய்து பூஜ்ய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

ஆலோசனை

          ஆய்வைத் தொடர்ந்து சிப்காட் திட்ட அலுவலகத்தில் சிப்காட் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்) தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பூஜ்ய கழிவுநீர் நிலையை எட்டுவது தொடர்பாக அனைவரிடமும்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்  கேட்டறிந்தார்.

                இந்நிகழ்வுகளில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் சு.ஈஸ்வரன், உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் என்.சுந்தரகோபால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ந.சீனிவாசன், இணைத்தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ம.சரவணகுமார் (பெருந்துறை), பி.மணிமாறன் (ஈரோடு), சுற்றுச்சூழல் பொறியாளர் (பறக்கும்படை) பி.பழனிசாமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: