Idhayam Matrimony

5 மாநில தேர்தல்களில் பாஜகவை எதிர்க்கும் சிவசேனா: உ.பி.யில் 150 தொகுதிகளில் போட்டி

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜகவை எதிர்த்து சிவசேனா போட்டியிடுகிறது. உ.பி.யில் மட்டும் அதிகப்படியாக 150 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜகவுடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டுள்ள சிவசேனா, மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. என்றாலும் மகராஷ்டிரா உட்பட பல்வேறு மாநில தேர்தல்களில் சிவசேனா தனித்தே போட்டியிட்டது. இந்த வகையில் அந்தக் கட்சி கடைசியாக பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 150 தொகுதிகளில் போட்டியிட்டது. இங்கு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததுடன் தனது வேட்பாளர்களின் டெபாசிட் தொகையையும் இழந்தது. என்றாலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநில தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடப் போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்தவரும் மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சருமான ஆனந்த் கீதே கூறும்போது, "5 மாநில தேர்தல்களில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டு சேர முடிந்தால், அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். யாருடனும் சேர முடியாவிட்டால் தனித்தே போட்டியிடுவோம்” என்றார்.
உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 150-ல் சிவசேனா போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இங்கு பாஜக முக்கிய போட்டியாளராக விளங்கும் நிலையில், அதன் சில நூறு வாக்குகளையே சிவசேனா பிரிக்கும் வாய்ப்புள்ளது. இதையே தான் பிஹாரிலும் அக்கட்சி செய்தது. உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகியவற்றிலும் சிவசேனாவுக்கு

பெரிய அளவில்வாக்குகள் இல்லை.

கோவா தவிர மற்ற நான்கு மாநிலங்களில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்கவும் இதுவரை எந்தக் கட்சியும் முன்வரவில்லை.
கோவாவில், பாஜகவின் தாய் கழகமான ஆர்எஸ்எஸ்ஸில் இருந்து பிரிந்த சுபாஷ் விளிங்கர் என்பவர் ‘சுரக் ஷா மன்ச்’ என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கியுள்ளார்.
இக்கட்சியுடன் சேர்ந்து போட்டியிட சிவசேனா பேச்சு நடத்தி வருகிறது. கோவாவில் மராத்தி மொழி பேசுவோர் கணிசமாக இருப்பதால், இங்கு சிவசேனா முதல்முறையாக தற்போது ஒரு தொகுதியையாவது வெல்லும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, முன்கூட்டியே பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல் செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் வரிசையில் சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
5 மாநில தேர்தலுக்குப் பின் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய வலியுறுத்தி தனது கட்சி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரை சந்திப்பார்கள் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்