திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று சொர்க்க வாசல் திறப்பு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      ஆன்மிகம்
Parthasarathy temple 2016 12 28

சென்னை, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
 
வைணவ திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி தினம் சிறப்பாக கொண்டாடப்படும். பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடைபெறும்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள புகழ் பெற்ற பார்த்தசாரதி கோவிலில் இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.இதையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு தனுர்மாத பூஜை தொடங்குகிறது. 4 மணிக்கு சுவாமி புறப்பாடு. சரியாக 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த காட்சியை பார்க்கவும், பெருமாளை தரிசிக்கவும் ஏராளமான பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் திரளுவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம்.சொர்க்கவாசல் திறப்பைக் காண சிறப்பு தரிசனத்துக்கு ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவிலின் இடவசதியை அடிப்படையாக வைத்து குறைந்த அளவே டிக்கெட்டுகள் அச்சிடப்படும். ஆனால் கூடுதல் டிக்கெட்டுகள் அச்சிட்டும், கூடுதல் விலைக்கு விற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.முக்கிய பிரமுகர்கள் என்று தனியாக பாஸ் கிடையாது. டூட்டி பாஸ், உபயதாரர், கட்டளைதாரர், ஊடகம் ஆகிய பாட்ஜீகள் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே பலர் கூடுதல் விலை கொடுத்து டிக்கெட் வாங்குகிறார்கள். இதனால் அறநிலையத் துறை அதிகாரிகள் நேரடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.


இதை ஷேர் செய்திடுங்கள்: