முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிட்பண்ட் மோசடி வழக்கில் சி.பி.ஐ. சம்மன் அனுப்பினால் ஆஜராக வேண்டாம் : எம்.பி.க்களுக்கு மம்தா பானர்ஜி உத்தரவு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

கொல்கத்தா  - சிட்பண்ட் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு சம்மன் அனுப்பினால் யாரும் ஆஜராக வேண்டாம் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

சிட்பண்ட் மோசடி
மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ரோஸ்வேலி சிட்பண்ட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் ரூ. 60 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தபஸ்பால், சுதீப் பந்தோபத்யாயா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திரிணாமுல் குற்றச்சாட்டு
மேலும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 6 எம்.பி.க்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. கருதுகிறது. எனவே, அவர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளனர். ஆனால், மம்தா பானர்ஜியை பழிவாங்குவதற்காகவே மத்திய அரசு சி.பி.ஐ.யை ஏவி விட்டு இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. மாநில முதல்வர்களில் மம்தா பானர்ஜி ஒருவர் மட்டுமே ரூபாய் நோட்டு பிரச்சினையை கையில் எடுத்து தீவிரமாக போராடி வருகிறார். இது மத்திய அரசுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவரை முடக்கும் வகையில் இந்த சிட்பண்ட் மோசடி விவகாரத்தை மோடி கையில் எடுத்திருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் கூறுகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கைக்கும் பணியாமல் சி.பி.ஐ.யை எதிர்கொள்வதற்கு மம்தா பானர்ஜி தயாராகி விட்டார்.

எம்.பிகளுக்கு உத்தரவு
இதையடுத்து தனது எம்.பி.க்களுக்கும், தலைவர்களுக்கும மம்தா பானர்ஜி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். சிட்பண்ட் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு சம்மன் அனுப்பினால் யாரும் ஆஜராக வேண்டாம். மற்றவற்றை நாம் பார்த்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் கூறும் போது, ரூபாய் நோட்டு பிரச்சினை விவகாரத்தை மம்தா பானர்ஜி ஒருவர்தான் தீவிரமாக எதிர்ப்பதால் அவரை எப்படியாவது பயமுறுத்தி முடக்கிவிட மோடி முயற்சிக்கிறார். இது மக்களுக்கு தெரியும். எனவே, அதை நாங்கள் எதிர்கொள்ள தயாராகி விட்டோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்