முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு மழை குறைவால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் வட்டம், சிறுவள்ளூர், கூத்திரப்பாக்கம், திரும்பெரும்புதூர் வட்டம், கண்ணன்தாங்கல், மதுரமங்கலம், மதுராந்தகம் வட்டம், பழையனூர், நெடுங்கல் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரிடையாக பார்வையிட்ட அமைச்சர் விவசாயிகளிடம் கலந்துரையாடி பாதிப்புகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

 

அமைச்சர் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் நெற்பயிர் எப்போது நடப்பட்டது, தண்ணீர் இல்லாமல் போனது எப்போது மற்றும் பருவமழை பெய்திருந்தால் ஒரு ஏக்கருக்கு விவசாயத்திற்கு ஆகும் செலவு போக கிடைக்கும் வருமானம் குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

 

பின்னர் காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை புகைப்பட கண்காட்சி மூலம் அமைச்சருக்கு அலுவலர்கள் விளக்கி கூறினர்.

 

பின்னர் விவசாயிககளிடம் கலந்துரையாடிய அமைச்சரிடம் பாதிப்பிற்குள்ளான விவசாயிகள் பயிர்களின் நிலையையும், பருவமழையை நம்பி பயிரிட்டதையும், பருவமழை குறைந்ததனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளையும் சென்ற முறை அதிக மழை பெய்ததனால் பயிர்கள் சேதமடைந்து ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளையும் எடுத்துக் கூறினார். எதிர்காலத்தில் அரசாங்கம் தங்களுக்கு உதவினால் தான் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும் என தெரிவித்தனர். மேலும் அருகில் உள்ள ஏரிகள் தூர்வாரி மதகுகளை சரி செய்தால் மழை காலங்களில் அதிக நீரை தேக்குவதன் மூலம் சாகுபடி காலம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் விவசாயம் செய்ய முடியும் எனவும் அதனை செய்து தர கோரிக்கை விடுத்தனர்.

 

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், அம்மா அவர்களின் அரசு விவசாயிகளின் துயரை போக்குவதற்காக தான் இந்த மாவட்டத்தில் என் தலைமையில் குழு அமைத்து விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

 

எந்த வித ஒளிமறைவுமின்றி வெளிப்படையாக, நேரிடையாக விவசாயிகளை சந்தித்து நியாயமான கருத்துக்கள் கோரிக்கைகள் அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். விவசாயிகள் மீது மிகுந்த அக்கறை கொண்ட காரணத்தினால் தான் நமது மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவரும் பருவமழை பொய்த்ததனால் முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிப்புகள் குறித்து நிவாரணம் பெற்றுத் தர விவரங்கள் வைத்துள்ளனர். 141 கிராமங்களில் பாதிப்புகள் இருந்தாலும் சில கிராமங்களுக்கு மட்டும் நேரிடையாக சென்று பார்வையிடுகிறோம் . அனைத்து கிராமங்களையும் பார்வையிட நீண்ட நாட்களாகிவிடும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தாலும் அதனை வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தால் அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் ஏரிகளை தூர் வார மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய காப்பீடுத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

விவசாயிகள், யார் பயிர் செய்து நஷ்டமடைந்துள்ளார்களோ அவர்களுக்கே நேரிடையாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

தமிழக அரசு விவசாயிகளின் மீது அக்கறை கொண்டுள்ள காரணத்தினால்தான் அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிப்புகள் குறித்து வருகின்ற 09.01.2016 அன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவே விவசாயிகள் கவலை கொள்ள தேவையில்லை என தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.என்.இராமச்சந்திரன், கே.மரகதம் குமரவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பழனி, .எம்.கோதண்டபாணி, மாவட்ட வருவாய் அலுவலர் க.சௌரிராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் ராஜேந்திரன், அருண்தம்புராஜ் ஜெயசீலன் கில்லி சந்திரசேகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம் , வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சீத்தாராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) /துணை இயக்குநர் லதா பானுமதி ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்