முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டையில் கேலோ இந்தியா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்ட பிரிவு சார்பில் நடத்தப்படும் கேலோ இந்தியா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொறுக்குத் தேர்வுகள் (2016-17) மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், தலைமையில் நேற்று (07.01.2017) நடைபெற்றது.

இவ்விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து பேசியதாவது:

விளையாடு இந்தியா எனும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 2016-17ம் ஆண்டிற்கு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணி கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொறுக்குத்தேர்வுகள் நடத்த தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொறுக்குத் தேர்வுகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் இன்று (07.01.2017) முதல் 08.01.2017 வரை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இதில் நேற்று (07.01.2017) தடகளம், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், இறகுப்பந்து, குத்துச்சண்டை, மேசைப்பந்து, கபாடி, டென்னிஸ், நீச்சல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.350-, இரண்டாம் பரிசாக தலா ரூ.250- மற்றும் மூன்றாம் பரிசாக தலா ரூ.150- வீதம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். 08.01.2017 அன்று மிதிவண்டி, கோ-கோ, கால்பந்து, ஜூடோ, வில்வித்தை, கூடைப்பந்து, கைப்பந்து, வளைகோல்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், மல்யுத்தம், போன்ற விளையாட்டுப் பொறுக்குத் தேர்வுகள் நடைபெறும். இதில் சிறப்பாக விளையாடும் இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவியர்கள் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான பொறுக்குத் தேர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். எனவே அனைவரும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், பேசினார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் விளையாட்டு துறை நிதியின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன், விளையாட்டு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்