முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களி்ல் சொர்க்கவாசல் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை  : வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி ஆலயத்தில்  நேற்று அதிகாலை, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

 பூலோக வைகுண்டம் : 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி ஆலயத்தில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து திருமொழி, இராப்பத்து திருவாய்மொழி என கொண்டாடப்படுகிறது. பகல்பத்து திருமொழி நிறைவுற்று, வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு  நேற்று அதிகாலை நடைபெற்றது. விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், ரத்தின அங்கி அணிந்து, சொர்க்கவாசல் கதவு திறந்து சென்றார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 கட்டணமில்லா பஸ் சேவை : சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி, பக்தர்களின் வசதிக்காக திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில், சிறப்பு கட்டணமில்லா பேருந்துகளின் இயக்கத்தினை அமைச்சர்கள்  வெல்லமண்டி என். நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கிவைத்தனர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து, மாம்பழச்சாலை, அம்மா மண்டபம் வழியாக ஸ்ரீரங்கம் செல்லும் இப்பேருந்துகள்,  இரவு வரை இயக்கப்பட்டன. சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலிலும்  நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாகச் சென்று, பார்த்தசாரதி சுவாமியை தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ் வில்லிபுத்தூர் : 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ் வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பெரிய பெருமாள் தோளுக்கினியானிலும், ஆண்டாள் ரெங்கம்மன்னார் சேர்த்தியிலும் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா முழக்கமிட்டு இறைவனை வழிபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் : கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதி சாரத்தில் உள்ள திருவாழிமார்பன் கோயிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.  இதேபோன்று பறக்கை மதுசூதனபெருமாள் கோயில் வடிவீஸ்வரம் இடது தீர்த்த பெருமாள் கோயில் உள்ளிட்ட ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

வேதாரண்யம் அபீஷ்ட வரதராஜ பெருமாள் : நாகை மாவட்டம் வேதாரண்யம் அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து சுவாமி ஸ்ரீ்தேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயில் : கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயில்: தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதிக்கரையில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை திருமஞ்சனம், சுப்ரபாதம், திருப்பாவை ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில்  நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்புவாசல் நடைபெற்றது. பின்னர் சயன கோலத்தில் எழுந்தருளிய சுவாமி அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  இதேபோல், பனதிருப்பதி சீனிவாச பெருமாள் கோயிலிலும் சுவாமி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் : காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்