இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      இந்தியா
himachal snowfall 2017 1 8

சிம்லா : இமாச்சலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா மற்றும் பண்டாரில் வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸாக நிலவுகிறது. கடும் பனிப்பொழிவால் உயரமான மலைப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் பனிச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடர்ந்த பனிமூட்டம் மற்றும் பனிப்பொழிவால் சாலை போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் மற்ற பகுதிகளில் இருந்து சிம்லா, மணாலி, கின்னாவூர் பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக சிம்லாவில் குவிந்த சுற்றுலா பயணிகளும் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.  சிம்லாவில் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களின் விநியோகமும் தடை பட்டுள்ளது.


இதற்கிடையே அதிகபட்சமாக சவுர்தார் என்ற இடத்தில் 90 செ.மீ பனிப்பொழிவு பதிவுாகியுள்ளது. நேற்று முன்தினம்  நண்பகல் வரை சிம்லாவில் 40 செ.மீ. பனிப்பொழிவு பதிவானது. சுற்றுலா பயணிகளும், உள்ளூர்வாசிகளும் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியே வர வேண்டாம் என சிம்லா மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.  இதேபோல் காஷ்மீரிலும் கடும் பனிப்பொழிவு காரணமாக 2-வது நாளாக  ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் கடுங்குளிர் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக உத்தராகண்ட் மாநிலத்தின் கர்வால், குமோன், நைனிடால் மற்றும் முசோரியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெண் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: