முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி, வேலைவாய்ப்பில் இந்திய வம்சாவளியினருக்கு முன்னுரிமை - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

பெங்களுரு : வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி இளைஞர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு :

மத்திய வெளியுறவுத் துறை, கர்நாடக அரசின் சார்பாக 14-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு பெங்களூருவில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில்  தொடங்கியது. இன்று வரை நடைபெறும் இம்மாநாட்டின் முதல் நாளன்று வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் இணை அமைச்சர் விஜய் கோயல், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங், கர்நாடக அமைச்சர்கள் தேஷ்பாண்டே, பிரியாங்க் கார்கே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுரினாம் நாட்டின் துணை அதிபர் மைக்கேல் அஸ்வின் சத்தியந்திரே அதின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் விஜய் கோயல் பேசும்போது, ‘‘இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் ஆவர். இதே வேகத்தில் இந்தியா பயணித்தால் 2025-ம் ஆண்டு உலகில் அதிக இளைஞர்களை கொண்ட நாடு என்ற பெருமையை பெரும். இந்தியா இயற்கை வளத்தால் நிரம்பி வழிந்தாலும், இளைஞர் வளமே நாட்டின் மிகப்பெரிய சொத்தாக விளங்குகிறது.

இங்குள்ள இளைஞர்கள் மட்டுமில்லா மல் பல்வேறு நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி இளைஞர்களும் மிகவும் திறமை உள்ளவர்களாக இருக்கின்றனர். கல்வி, கண்டுபிடிப்பு, தொழில் என பல துறைகளிலும் இந்திய வம்சாவளி இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர். இந்தியாவை விட்டு பிரிந்து இருந்தாலும், இந்திய வம்சாவளி இளைஞர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு மத்திய அரசு உதவியாக இருக்கும்''என்றார்.

பிரகாஷ் ஜவடேகர் பேச்சு :

பிற்பகலில் நடந்த ‘‘இந்தியாவில் படிக்கும் இந்திய வம்சாவளி மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் படிக்கும் இந்திய வாழ் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த கருத்தரங்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கர்நாடக ஐடி வளர்ச்சித்துறை அமைச்சர் பிரியாங் கார்கே, பல்வேறு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது பிரகாஷ் ஜவடேகர் பேசும்போது, ‘‘பண்டைய காலத்தில் உலகிலே சிறந்த கல்வி நிலையங்களை கொண்டிருந்த இந்தியா, தற்போது பின் தங்கி இருப்பது வேதனையானது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழங்களை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் சிறந்த 10 பல்கலைக் கழகங் களில் பெரும் பான்மையான பல்கலைக் கழகங்களை இந்தியா உருவாக்கும்.

இந்தியாவில் பயிலும் இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு வழங்கப் படும் கல்வி ஊக்கத் தொகை அதிகரிக் கப்படும். இதுவரை 40 நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மாணவர்களின் கல்விக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகை, அடுத்த ஆண்டு முதல் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்வோருக்கு வழங்கப்படும். கல்வி மட்டுமில்லாமல் வேலை வாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கு, புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இந்திய வம்சாவளி இளைஞர்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்''என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்