கன்னியாகுமரி,
கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைiமையில், மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் முன்னிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு அழகப்பபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வழங்கினார்கள். கலெக்டர் , பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேசன் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை பெறும் 5,24,142 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் காவலர் குடும்ப அட்டையுடைய காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள 426 இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டடி நீள கரும்புத்துண்டுடன் தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடைகள் மூலம் பெற்று பயனடையுமாறும், கன்னியாகுமரி மாவட்டததில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ, நாகர்கோவில் கோட்டாட்சியர் ஆர். ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் டி.சின்னம்மாள், அழகப்பபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வி.ஜெ. ஸ்டீபன், பொது விநியோகத்திட்ட துணை பதிவாளர் பி. ராஜேந்திரன், அழகப்பபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பி.ஐயப்பன், வட்ட வழங்கல் அலுவலர் (அகஸ்தீஸ்வரம்) கோலப்பன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அருளரசு, அரசு வழக்கறிஞர் ஞானசேகர், கனகராஜன், எஸ். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.