கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடாததால் இழப்பீடு வழங்கக்கோரும் தமிழக அரசின் மனு சாட்சிகள் பட்டியலை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி - காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடாததால், தமிழகத்திற்கு 2 ஆயிரத்து 480 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ந்த மனு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான சாட்சிகளின் பட்டியலை 5 வார காலத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
டெல்டா மாவட்ட விவசாயத்திற்கென காவேரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடாததால், தமிழ்நாட்டில் உணவு உற்பத்தியில் 680 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மின் உற்பத்தியில் 268 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை ஈடுசெய்ய கர்நாடக அரசு தமிழகத்திற்கு 2,480 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழக அரசின் சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த விசாரணை, நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக இரு மாநிலங்களையும் சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடங்கிய சாட்சிகள் பட்டியலை 5 வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.