முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ஜினீயர் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை கைவிட வேண்டும்: திருநாவுக்கரசர் - அன்புமணி ராமதாஸ்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, என்ஜினீயர் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை கைவிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்விகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டுமென 2016-ல் உச்சநீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது.இதை ஏற்றுக் கொண்டு 2017 முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தி தேசிய நுழைவுத் தேர்வில் (நீட்) பங்கேற்பதென ஏற்கனவே தமிழக கல்வி அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். மத்திய பாடத்திட்டத்தை விட (சி.பி.எஸ்.இ.) மாநில பாடத்திட்டங்கள் சுலபமாக இருப்பதால் நிறைய மாணவர்கள் அதில் சேருகிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் இதே மாநில பாடத்திட்டத்தில் படிக்கிற மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுகளில் பயனடைவதைப் போல அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் பயனடைவதில்லை.

அரசு பள்ளியில் படிக்கிற 35 மாணவர்கள் தான் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஏறத்தாழ 571 பொறியியல் கல்லூரிகளில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து படித்து வருகின்றனர். மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வு நடத்துவதைப் போல பொறியியல் கல்லூரியிலும் அனுமதித்தால் தமிழகம் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாக நேரிட்டு ஏழை- எளிய, பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும்.மாநில பாடத்திட்டத்தில் படிக்கிற 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் குறித்து தமிழக அரசு சிந்தித்து செயல்பட வேண்டும். மத்திய பாடத் திட்டத்திற்கு இணையாக மாநில பாடத்திட்டத்தையும் வலிமைப்படுத்தி போட்டியிடுவதற்கான சூழலை நமது மாணவர்கள் மத்தியில் உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு இருக்கிறது. இந்நிலை உருவாக இன்னும் 5 ஆண்டுகள் நமக்கு தேவைப்படும். அது வரை நுழைவுத் தேர்வை எதிர் கொள்வதிலிருந்து தமிழக மாணவர்களை பாதுகாக்க கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியின்படி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்து மருத்துவ, பொறியியல் படிப்புகளில் நுழைவுத் தேர்வை தவிர்த்து தமிழக மாணவர்களை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதைப் போன்று பொறியியல் படிப்புக்கும் தேசிய பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இதுகுறித்து முடிவெடுக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு இம்மாத இறுதியில் கூடவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கு முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. பொறியியல் பொது நுழைவுத் தேர்வு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் நிலையில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. பொறியியல் கல்வியின் தரத்தை உயர்த்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் பொது நுழைவுத் தேர்வு மிகவும் அவசியம் என்ற கருத்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் நிலவுவதாகவும், அதனால் வரும் ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு உறுதி என்றும் கூறப்படுகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக கபில் சிபல் இருந்த போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. அப்போதே பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து பொது நுழைவுத் தேர்வு திட்டம் கைவிடப்பட்டது. அத்திட்டத்தை தான் நரேந்திரமோடி அரசு தூசு தட்டி அறிமுகப்படுத்தப் படவுள்ளது. மருத்துவப் படிப்புக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப் பட்டதால், தமிழகத்தைச் சேர்ந்த ஏழை மற்றும் ஊரக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு எந்த அளவுக்கு பறிக்கப்பட்டதோ, அதை விட 10 மடங்கு மோசமான பாதிப்பை பொறியியல் நுழைவுத் தேர்வு ஏற்படுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு எந்த வடிவத்தில் இருக்கும் என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அதுகுறித்த முடிவை அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக் குழு ஆறு மாதங்களுக்கு முன்பே இறுதி செய்து விட்டது. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்திய தகவல்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வை பொறியியல் படிப்புக்கும் நீட்டிப்பது தான் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் திட்டமாகும். இதை அந்த அமைப்பின் தலைவர் அனில் சகஸ்ரபுதே பல ஆலோசனைக் கூட்டங் களில் மறைமுகமாக உறுதி செய்திருக்கிறார்.

அதுமட்டு மின்றி மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ தான் இத்தேர்வையும் நடத்துகிறது.மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்ப்பதற்காக முன்வைக்கப்படும் அனைத்துக் காரணங்களும் இதற்கும் பொருந்தும். முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு என்பது முழுக்க முழுக்க மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஆகும். ஆனால், இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுமே அந்த பாடத்திட்டத்தை படிப்பதில்லை. தமிழ்நாடு உள்ள பெரும்பாலான மாநிலங்கள் தங்களுக்கென தனிப்பாடத்திட்டத்தை உருவாக்கி பின்பற்றுகின்றன. அவ்வாறு பல்வேறு மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் மாணவர்களை மத்தியப் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுதும்படி கட்டாயப்படுத்துவது சமூக நீதிக்கு எதிரானது ஆகும்.இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்திய தகவல்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு மூலம் தான் நடைபெறுகிறது. இதில் சேரும் தமிழகப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும். உதாரணமாக, கடந்த ஆண்டு ஐ.ஐ.டிக்களிலுள்ள 10,000 இடங்களில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்த இடங்களின் எண்ணிக்கை வெறும் 7 மட்டுமே. இது மொத்த இடங்களில் 0.07% மட்டுமே. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் நிலை இவ்வாறு இருக்கும் நிலையில், பாடத்திட்டத்தை வலுப்படுத்த போதிய அவகாசம் கொடுக்காமல் பொறியியல் படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால், தமிழகத்திலுள்ள முன்னணி பொறியியல் கல்லூரிகளில் உள்ளூர் மாணவர்களுக்கு இடம் கிடைக்காதுபொறியியல் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்; வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இவற்றையெல்லாம் செய்ய வேண்டியது தனியார் கல்லூரிகளில் தானே தவிர, அரசு கல்லூரிகளில் அல்ல. மருத்துவம், பொறியியல் ஆகிய இரு படிப்புகளுக்குமே தனியார் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைப்படுத்தப்படுவதை பா.ம.க. ஆதரிக்கிறது. ஆனால், மக்களின் வரிப்பணத்தை முதலீடு செய்து நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு ஆகும். இந்தியாவில் கோடீஸ்வரர்கள் முதல் பரம ஏழைகள் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி வழங்கப்படும் போது, ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து சிந்திக்கலாம். அதுவரை இப்போது நடைமுறையிலுள்ள மாணவர் சேர்க்கை முறையே நீடிக்க வேண்டும்.எனவே, பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், அகில இந்திய கல்விக்குழுவும் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago