முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் பங்க்கில் டெபிட் - கிரெடிட் கார்டுகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் கிடையாது : மத்திய அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - பெட்ரோல் பங்க்கில் டெபிட் - கிரெடிட் கார்டுகளுக்கு இனி பரிவர்த்தனை கட்டணம் கிடையாது என்று மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் அதிருப்தி
ஜனவரி 9-ம் தேதி (நேற்று) முதல் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்தால் அதற்கு விற்பனையாளர்களிடம் இருந்து 1 சதவீதம் பரிமாற்ற வரியை வசூலிக்கும்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியது. இது நாடு முழுவதும் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனை யாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பொதுவாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப் படும் போது, விற்பனையாளர்களுக்கு 1.5 சதவீதம் தான் கமிஷன் கிடைக்கிறது. அதில் 1 சதவீதத்தை வரியாக வங்கிகளுக்கு கொடுத்து விட்டால் விற்பனை நிலையங்கள் நடத்துபவர்களுக்கு கடும் இழப்பு ஏற்படும் என்று தெரியவந்தது.

சங்கத்தினர் எதிர்ப்பு
இது தொடர்பாக, தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கத்தினர் கூடி ஆலோசித்தனர். பிறகு ஒரு சதவீத வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெபிட்கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என்று பெட்ரோல் விற்பனையாளர் சங்கத்தினர் அறிவித்தனர். இதனால் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் போடுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் சுமார் 4200 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் தினமும் சுமார் 50 சதவீதம் பேர் கார்டுகள் மூலமாகவே பெட்ரோல் பெற்று வருகிறார்கள்.எனவே பெட்ரோல், டீசல் பெற வரும் வாடிக்கை யாளர்களில் பாதி பேருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நிலை உருவானது.

அவகாசம் நீட்டிப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டது. பெட்ரோல் விற்பனையாளர் கள் சங்கப் பிரதிநிதிகளையும், வங்கி அதிகாரிகளையும் சந்தித்து இதுபற்றி பேச வைத்தனர்.அப்போது கார்டுகள் மூலம் நடைபெறும் ரொக்க மில்லா பண பரிவர்த் தனைக்கு 1 சதவீதம் வரி விதிப்பதை 13-ந்தேதி வரை நிறுத்தி வைப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் வினியோகிப்பதற்கான 1 சதவீதம் வரி விதிப்பை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்க வங்கிகள் அவகாசம் அளித்துள்ளன. இந்த 5 நாள் அவகாசத்தால் பெட்ரோல் விற்பனையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதையடுத்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளை ஏற்றுக் கொண்டு 13-ந்தேதி வரை பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று விற்பனையாளர்கள் அறிவித்தனர். இதனால் நேற்று பொதுமக்கள் கார்டுகளை பயன்படுத்தி தங்கு தடையின்றி பெட்ரோல் பெற்றனர்.இதற்கிடையே 1 சதவீதம் பரிமாற்ற வரி விதிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய அமைச்சர் அறிவிப்பு
பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெபிட்,கிரெடிட் கார்டுகளை பெட்ரோல் பங்க்கில் பயன்படுத்தினால் சேவை வரி கிடையாது என   அறிவித்துள்ளார். எனவே பெட்ரோல் பங்க்கில் கார்டு பயன்படுத்தினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ஜனவரி 13-ம் தேதிக்கு பிறகும்  டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் பங்க்கில் பணம் செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்