கோவை நேரு விமானவியல் கல்லூரியின் 10வது பட்டமளிப்பு விழா

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      கோவை

 

கோவை,

 

கோவை பாலக்காடு சாலையில் அமைந்துள்ள நேரு விமானவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் கல்லூரியின் 10வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பண்டிட்ஜி அரங்கில் நடைபெற்றது. விழாவில் மொத்தம் 100 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

 

விழாவிற்கு வந்திருந்தவர்களை நேரு விமானவியல் கல்லூரியின் முதல்வர் பி.ஆர். பாலாஜி வரவேற்று ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் எஸ்.சுப்பையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான பி.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.சுப்பையன் பேசியதாவது :- இந்தியாவின் கல்வித் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.

 

நம் நாட்டின் கல்வித்தரம் மேல்நாட்டு கல்வித்தரத்திற்கு சமமாக இருக்கின்றது. விமானவியல் துறையில் நல்ல வளர்ச்சியும், அத்துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே மாணவர்கள் அத்துறையின் வளர்ச்சிக்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி, அம்பேத்கார் மற்றும் டாக்டர்.அப்துல் கலாம் போன்ற தலைவர்களை பின்பற்றி மாணவர்கள் தம் கல்வித் தகுதியுடன், நம் நாட்டுக் கலாச்சாரத்தையும் கற்று வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 

பட்டம் பெற்ற பின், பணியில் சேரும் மாணவ மாணவியர், விமானப் பயணிகளின் பாதுகாப்பில் பெரும் பொறுப்போடு செயல்பட வேண்டும். எச்சரிக்கை, கவனம் மற்றும் கரிசனத்தோடு செயல்படும் மந்திரத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஐம்பது ஆண்டுகள் கடந்த புகழ்பெற்ற இக்கல்வி நிறுவனத்தில் பட்டம் பெறும் இளைஞர்கள் நீங்கள், வாழ்விலும் மதிப்பீடுகளைக் கைக்கொள்ள வேண்டும். பிறருக்கு பயன்பாடு மற்றும் சேவை நோக்கில் செயலாற்ற வேண்டும். ஒழுக்கம், கடமை. அர்ப்பணிப்புகள் வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களாகும்.

 

பெற்றோர்களை நன்றியோடு நினைத்துக் கடமையாற்ற வேண்டும். மேலும் ஆசிரியர்களைக் கடவுளுக்கும் மேலாக நினைக்க வேண்டும். கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில், 42 சதவீதமாக மற்ற மாநிலங்களை காட்டிலும் முன்னேறியுள்ளது. சீனா, அமெரிக்காவை காட்டிலும் உயர்கல்வியில் கூடுதல் முன்னேற்றம் கண்டுள்ளது என்று கூறினார்.

 

விழாவில் பேராசிரியர் பி.முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார். பி.எஸ்சி ஏரோ நாட்டிக்கல் துறை தலைவர் பேராசிரியர் ஆர். சிங்காரவடிவேலு நன்றியுரையாற்றினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: