முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளியை கேலி செய்ததாக ஹாலிவுட் நடிகை ஸ்ட்ரீப் குற்றச்சாட்டு - டிரம்ப் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - மாற்றுத்திறனாளியை கேலி செய்ததாக ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப் கூறிய குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்டு டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கோல்டன் குளோப்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற 2017-ம் ஆண்டுக்கான 74-வது கோல்டன் குளோப் விருது விழாவை ஜிம்மி பாலோன் துவக்கி வைத்தார். இதில் சிறந்த படமாக தேர்வு  செய்யப்பட்ட `லா லா லாண்ட்' படம் 7 விருதுகளை வென்றது.

குற்றச்சாட்டு
இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல ஹாலிவுட் நடிகையும் மூன்றுமுறை ஆஸ்கர் விருதினையும்,  திரைப்படத்துறை தொடர்பான சுமார் நூறு உயர் விருதுகளையும் பெற்ற மெரில் ஸ்ட்ரீப்-க்கு வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு நன்றி தெரிவித்து பேசிய மெரில் ஸ்ட்ரீப், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்,  பிரசாரம் ஒன்றின் போது மாற்றுத்திறனாளி செய்தியாளர் ஒருவரை வெளிப்படையாக கேலி செய்ததை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.

வேண்டுகோள்
மேலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது பதவி, அந்தஸ்தைப் பயன்படுத்தி மக்களை அவமானப்படுத்தும்போது பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றார். இத்தகைய அவமதிப்புகளை ஊடகங்கள் சரியான வகையில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். அதை செய்ய ஊடகவியலாளர்கள் தவறிவிட்டதால், அமெரிக்க ஊடகங்கள் மட்டுமின்றி, சர்வதேச ஊடகவியலாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த கோல்டன் குளோப் விழாவில் இதுதொடர்பாக பேச நேரிட்டுள்ளது என கண்கலங்கியபடி அவர் குறிப்பிட்டார்.

டிரம்ப் மறுப்பு
இந்நிலையில், மெரில் ஸ்ட்ரீப்புக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள டிரம்ப், ஹாலிவுட்டில் தன்னைத்தானே அதிகமாக சுயமதிப்பீடு செய்துகொள்ளும் நடிகைகளில் ஸ்ட்ரீப்பும் ஒருவர் என்று சீறிப் பாய்ந்துள்ளார். பிரசாரத்தின்போது செய்தியாளரை நான் கேலி செய்யவில்லை எனவும், அவர் செய்தியை மாற்றி எழுதியதை நடித்து காட்டியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். என்னை யாரென்றே தெரியாமல் இதுபோன்ற கருத்தை உதிர்த்துள்ள அவருக்கு எனது மனதில் உள்ளது என்ன? என்பதை அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்