சிரிய கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் : அதிபர் ஆசாத் தகவல்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      உலகம்
syria azad(N)

டமஸ்கஸ்  - கிளர்ச்சியாளர்களுடன் எல்லாவற்றை குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளதாக சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப்போர்
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு, மார்ச் 15-ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. தொடர்ந்து 6-வது ஆண்டாக நடைபெற்றுவரும் இந்த உள்நாட்டுப் போரில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

ரஷ்யா படைகள் தாக்குதல்
இதில் அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைக்கு ஆதரவாக ரஷ்யா ராணுவப் படைகள் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவும் அவ்வவ்போது எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா, துருக்கி ஆதரவுடன் இரு தரப்புக்கும் இடையே கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. போராளி குழுக்கள் மற்றும் சிரியா அரசு பிரதிநிதிகளிடையே இந்த மாதம் கஜகஸ்தான் நாட்டில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

விவாதிக்க தயார்
இந்நிலையில், கிளர்ச்சியாளர்களுடன் எல்லாவற்றை குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளதாக சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்துள்ளார்.  இது குறித்து ஆசாத் கூறுகையில், ”கஜகஸ்தானில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் எதிர்த்தரப்பினர் சார்பில் யார் பிரதிநிதியாக வருகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை. அதேபோல் பேச்சுவார்த்தையை எப்போது நடத்துவது என்பதும் முடிவு செய்யப்படவில்லை. தேதி முடிவான உடன் அஸ்டானா செல்வதற்கு அரசு தரப்பு குழு தயாராக உள்ளது” என்றார்.


இதை ஷேர் செய்திடுங்கள்: