ஜல்லிக்கட்டு தடைக்கு மத்தியில் ஆளும் பாஜக காரணம் அல்ல: வெங்கையா நாயுடு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      இந்தியா
Venkaiah Naidu 2017 01 10

சென்னை, ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியம். ஜல்லிக்கட்டு தடைக்கு மத்தியில் ஆளும் பாஜக காரணம் அல்ல என்று மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் இந்தியா டூடே ஊடகத்தின் இரண்டு நாள் மாநாடு நேற்றுமுன் தீனமும் ,  நேற்றும் நடைப்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 6 மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், கலையுலக பிரபலங்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.

இன்றைய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், தமிழகத்தில் மக்கள் அரசுதான் நடந்து வருகிறது; ஜனநாயக முறைப்படிதான் எல்லாம் நடக்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று கூறினார்.ஜல்லிக்கட்டு தடைக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு காரணமல்ல, இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் கருத்து கூற இயலாது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பராம்பரியம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது குறித்து மத்திய அரசு என்ன செய்ய இருக்கிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.


மேலும், தமிழக மக்கள் புத்திசாலிகள், திறமையானவர்கள், கடும் உழைப்பாளிகள் என்று கூறிய வெங்கைய்ய நாயுடு, தமிழ்நாடு வேகமாக வளர்ந்து வரும் மாநிலம் என்றும், தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் தெரிவித்தார்.தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் வலுவாக உள்ளன என்றும், ஜெயலலிதா மறைந்த பிறகு அரசியல் களத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், அதை அடுத்த தேர்தலில் பாஜக பயன்படுத்தும் என்றும் கூறினார். ஜெயலலிதா இருந்த போதே ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பணியாற்றியுள்ளார். தற்போது முதல்வராக இருக்கிறார். இவர் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர். அதிமுக பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவைப் பற்றியும், அவர் எப்படி செயல்படுவார் என்பது பற்றியும் தெரியாது. முதல்வராக யார் இருப்பார்கள் என்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம். அதில் என்றைக்கும் பாஜக தலையிடாது என்று வெங்கையா நாயுடு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: