முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இராசிபுரம் மற்றும் பிள்ளாநல்லூர் பகுதியில் பயனாளிகளுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு:அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல்:பொங்கல் திருநாள் - 2017 பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள இராசிபுரம் மற்றும் பிள்ளாநல்லூர் ஆகிய  பகுதிகளில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை நியாய விலைக்கடைகளில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் விழாக்கள் நடைபெற்றது. இவ்விழாக்களுக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம்  தலைமை வகித்தார். இவ்விழாக்களில்  சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா  கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார்கள்.நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை நியாய விலைகடையிலும், பிள்ளாநல்லூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை நியாய விலைக்கடையிலும்  சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா  சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி பேசும் போது தெரிவித்ததாவது, மறைந்த  முன்னால் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா  மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற உயர்ந்த நோக்கோடு, பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். ஏழை எளிய பெண்களுக்காக திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தை 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டு அதனை செயல்படுத்தியவர் மறைந்த  முன்னால் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா  ஆவார்.

 தமிழ்நாடு முதலமைச்சர்  எதிர்வரும் பொங்கல் 2017 திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் 1.80 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில்  தமிழ்நாடு முதலமைச்சர்  சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்துள்ளார்கள். இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பிற்காக ரூ.200.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 4,27,963 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க உள்ளது. இப்பரிசுத்தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி கரும்புத்துண்டு ஆகிய பொருட்கள் வழங்கப்படுகின்றது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள  கூட்டுறவுத்துறை சார்பில் இயங்கும் 865 நியாய விலைக்கடைகளிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் இயங்கும் 45 நியாய விலைக்கடைகளிலும் மற்றும் 4 மகளிர் நியாய விலைக்கடையிலும் என மொத்தம் 914 நியாயவிலைக்கடைகளில் சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட 192 நியாய விலைக்கடைகளில் 87,433 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அனைவரும் இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை கொண்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடிட வேண்டும். இவ்வாறு  சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா  பேசினார்.அதனைத்தொடர்ந்து இராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருக்கபுரம், சக்தி நகரில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் பயிற்சிக்கூடம் கட்டிடம் கட்டும் பணியினை  சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா  பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.இவ்விழாக்களில் கூட்டுறவுத்துறையின் இணைப்பதிவாளர் சு.இராமதாஸ்  வரவேற்புரையாற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ம.இராஜசேகரன், சேலம் -நாமக்கல் ஒருங்கிணைந்த ஆவின் தலைவர் ஆர்.சின்னுசாமி, ஆர்.சி.எம்.எஸ்.தலைவர் எஸ்.பி.தாமோதரன், இராசிபுரம் முன்னால் நகர்மன்றத்தலைவர் எம்.பாலசுப்பிரமணியம், நாமகிரிப்பேட்டை முன்னால் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ஈ.கே.பொன்னுசாமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவாளர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொது விநியோகத்திட்டத்தின் துணைப்பதிவாளர் கே.ஜெகநாதன்  நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்