ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தின் கீழ், 5,82,689 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது: அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      ஈரோடு

 

ஈரோடு: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகிய 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார்கள். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், சத்திநகரம், மேட்டுப்பாளையம் ரோடு இ.சி.001 நியாயவிலைக்கடையில் 70 பயனாளிகளுக்கு கலெக்டர்டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில், வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை ஆணையர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர்.சி.சந்திரமௌலி முன்னிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அவர்கள் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி தெரிவித்ததாவது,ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 5,79,743 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும், 1,611 காவலர் அட்டைதாரர்களும், 1,335 இலங்கை தமிழர் குடும்ப அட்டைதாரர்கள் என 5,82,689 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு 5,82,689 கிலோ பச்சரிசியும், 5,82,689 கிலோ சர்க்கரையும் வழங்கப்பட உள்ளது.

 

இவ்வாறு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கோபி சார் ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் சு.ஈஸ்வரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மு.முருகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வி.தெய்வநாயகம், மாவட்ட கூட்டுறவு அச்சுகூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.வரதராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார், உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: