முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு:அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை:முதலமைச்சர் கடந்த 9ந் தேதி அன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டை உடைய அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகிய 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார்.திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், மாமண்டூர் கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலைக்கடையை சேர்ந்த 900 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம், மேல்வில்வராயநல்லூர் கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலைக் கடையை சேர்ந்த 696 குடும்ப அட்டைதாரர்களுக்கும், திருவண்ணாமலை நகராட்சி, 4-வது வார்டுக்கு உட்பட்ட கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக் கடை எண்.23-ல் 1254 குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் பிராந்த் மு. வடநேரே தலைமையில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் வழங்கி பேசியதாவது,‘கழகமே கோயில், அம்மாவே தெய்வம், கடந்த 5.12.2016 அன்று நம்மை மீளாத்துயரில் விட்டுச் சென்ற மறைந்த மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சீரிய திட்டமான குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டமாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 6,42,500 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. தமிழரின் அடையாளம் பொங்கல் விழா, இவ்விழாவினை சீரும், சிறப்பாக அனைவரும் கொண்டாடும் வகையில் இன்று அம்மா வழி வந்து நமது அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. மிகச் சிறப்பாக செய்தவன் தமிழன் தமிழருடைய பழக்க வழக்கம், நாகரிகம், பண்பாடு இன்றும் உலக மனிதர்களிடையே வியப்பையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. தமிழர்களின் திருநாளும் தைத்திருநாள் விவசாயிக்கும் அதை சார்ந்த உழைப்பாளிக்கும் பெருமையை ஏற்படுத்தும் நன்னாளாகும். மக்களால் நான், மக்களுக்காக நான் என தன் வாழ்நாளை விவசாயிகளுக்காக அர்ப்பணித்தவர்  அம்மா ஆவார். ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில், உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில் என உரைத்த புரட்சித் தலைவர் வழியில் விவசாயிகளுக்குத் தேவையான எல்லா வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி, இன்று உணவு உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது அம்மாவின் அரசு. அம்மா தமிழக மக்களுக்கு காவல் தெய்வமாய், தாய்மார்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். பிள்ளைகளின் ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை பாடப்புத்தகம் முதல் மடிக்கணினி வரை அனைத்தும் விலையில்லாமல் வழங்கினார். மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி, ஏழை பெண்களின் வாழ்வாதாரத்திற்காக விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள், பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு 8 கிராம் தங்கத்துடன், 10 மற்றும் 12-ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு அம்மா அவர்கள் சாதி வேறுபாடு, கட்சி வேறுபாடின்றி பசுமை வீடுகள் வழங்கியுள்ளார்’ என்றார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் தூசி.கே.மோகன்,  கலசப்பாக்கம் வி.பன்னீர்செல்வம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் அமுதா அருணாச்சலம்,  தண்டராம்பட்டு நிலவள வங்கி தலைவர் எஸ்.ஆர்.தருமலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ப.சுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.அமலதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் கே.சாவித்திரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் ஜி.தேன்மொழி, பொது விநியோக திட்ட மாவட்ட பதிவாளர் எம்.மோகன் துணைப்பதிவாளர்கள் சா.ராஜா, ஏ.சரவணன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஜி.ராமச்சந்திரன்,  கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்