தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டில் மனு

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      சினிமா
chennai high court 2017 01 11 0

சென்னை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்காக சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரை தேர்தலை நடத்தும் அதிகாரியாக நியமிக்கவேண்டும்.ஆனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் பிப்ரவரி 5-ந் தேதி தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.1 லட்சமும், பிற நிர்வாக பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் ரூ.50 ஆயிரமும், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் ரூ.10 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் 70 சதவீதம் பேர், சிறு பட்ஜெட் படத்தை தயாரிப்பவர்கள். தேர்தல் கட்டணமாக பெரும் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடம் கூட இவ்வளவு பெரிய தொகை வசூலிக்கப்படுவதில்லை. இதுபோல தேர்தல் கட்டணம் நிர்ணயிக்க செயற்குழுவுக்கு அதிகாரம் இல்லை.தேர்தல் அறிவிப்பில் தேர்தலை நடத்தும் அதிகாரியின் கையெழுத்து எதுவும் இல்லை. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதமானது.

அதனால், பிப்ரவரி 5-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று டிசம்பர் 17-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். இந்த தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதேபோல, மேலும் சில தயாரிப்பாளர்கள் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த தேர்தலை நடத்துவதற்கு ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியனை நியமிக்கலாம் என்று மனுதாரர்களின் வக்கீல்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை பின்னர் பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: