தி.மலை அண்ணாமலையார் கோவிலில்ஆருத்ரா தரிசனம்:ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      திருவண்ணாமலை
photo02

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. அப்போது தீப மை நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறும் அதன்படி நேற்று அண்ணாமலையார் கோவிலில் 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று காலை சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், தேன், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. கடந்த மாதம் 12ந் தேதி மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீப கொப்பரையில் இருந்து கொண்டுவரப்பட்ட தீபமை நடராஜருக்கு  அணிவிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து திருமஞ்சனகோபுரம் வழியாக நடராஜர் மாடவீதியில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபமை பிரசாதம் இன்று (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு வழங்கப்படவுள்ளது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து கோவில் நிர்வாக அலுவலரிடம் தீப மை பெற்றுக் கொள்ளலாம். நேரில் பெற முடியாதவர்களுக்கு தபால் மூலம் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் சி.ஹரிபிரியா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: