முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னரே நடவடிக்கை : மத்திய அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - சுப்ரீம் கோர்ட்டு  தீர்ப்பு வெளியான பின், ஜல்லிக்கட்டு தொடர்பான உரிய நிலைப்பாடு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் மிருகங்களை வதை செய்வதாக கூறி இந்தப் போட்டியை நடத்துவதற்கு  சுப்ரீம் கோர்ட்டு  தடை விதித்தது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இரு தினங்களுக்கு முன் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக் கட்டு போட்டி நடத்த அனுமதிக் குமாறு ஏராளமான இளைஞர்கள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்கள் போராட்டம்
நடிகர் கமல்ஹாசனும் மிருகங்களைக் காக்க வேண்டுமெனில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டு, பிரியாணிக்கு தடை விதிக்க வேண்டும் என குரல் எழுப்பினார். மேலும் தமிழக அரசு சார்பிலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே கூறியதாவது:-

விரைவில் தீர்ப்பு
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு தற்போது  சுப்ரீம் கோர்ட்டின்  நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வெளியாக வில்லை. தீர்ப்பு வெளியானதும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தேவையான நிலைப்பாட்டை எடுக்கும். தீர்ப்புக்காக மட்டுமே தற்போது மத்திய அரசு காத்துக் கொண்டிருக்கிறது.  சுப்ரீம் கோர்ட்டின்  தீர்ப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியாகலாம். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து  சுப்ரீம் கோர்ட்டும் நல்ல தீர்ப்பையே வழங்கும் என நம்புகிறோம். தமிழகத்தின் பாரம்பரியம் என்னவென்பதை நீதிமன்றம் நன்கு அறியும்.

முந்தைய அரசால்...
மிருகங்களை காட்சிப்படுத்தவும், பழக்கப்படுத்தவும் உருவாக்கப்பட்ட தடைப் பட்டியலில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காளைகளையும் சேர்த்து விட்டது. அதுதான் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு காரணம். அந்தப் பட்டியலில் இருந்து காளையை நீக்கிவிட்டதாக நீதிமன்றத்திடம் தெளிவாக விளக்கி இருக்கிறோம். ஜல்லிக்கட்டு மிருகத்தை வதைக்கும் விளையாட்டு அல்ல. தமிழக மக்களின் கவலையை மத்திய அரசு நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக மட்டுமே மத்திய அரசு அமைதி காத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்