இன்று 2-வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய ‘ஏ’ அணி

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      விளையாட்டு
india-eng 2017 1 11

மும்பை : இந்திய ‘ஏ’- இங்கிலாந்து லெவன் மோதும் 2-வது பயிற்சி ஆட்டம் இன்று நடக்கிறது. முதல் பயிற்சி போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய ‘ஏ’ அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.

தொடரை இழந்த இங்கிலாந்து

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் இந்தியா 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. தற்போது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 15-ந்தேதி புனேயில் நடக்கிறது.


2 பயிற்சி ஆட்டம்

ஒருநாள் தொடருக்கு முன்பு இங்கிலாந்து லெவன் இந்திய ‘ஏ’ அணியின் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது. இதன்படி நேற்று முன்தினம் நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து லெவன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய ‘ஏ’ அணி 304 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது பரிதாபமே. அம்பதி ராயுடு 100 ரன்னும், டோனி 68 ரன்னும் அதிரடியாக விளையாடி எடுத்தனர். இதற்கு பலன் இல்லாமல் போனது.

இன்று 2-வது ஆட்டம்

இந்திய ‘ஏ’- இங்கிலாந்து லெவன் மோதும் 2-வது பயிற்சி ஆட்டம் இன்று நடக்கிறது. முதல் பயிற்சி போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு டோனி தலைமையிலான இந்திய ‘ஏ’ அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் டோனியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் மும்பை மைதானத்துக்கு அதிக அளவில் வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: