ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன் உறவினர்கள் மீது லஞ்ச வழக்கு

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      உலகம்
Ban Ki-moon 2016 10 1

சியோல்  - ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் உறவினர்கள் மீது அமெரிக்காவில் லஞ்ச குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பணியிலிருந்து ஓய்வு
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வந்த பான் கீ மூன்(72) கடந்த டிசம்பர் மாதத்துடன் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு தனது சொந்த நாடான தென் கொரியா சென்று ஓய்வு காலத்தை கழிக்கவிருப்பதாக பான் கீ மூன் தெரிவித்திருந்தார். இதனால் தென் கொரியாவில் நடைபெறும் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என தெரிகிறது.

அதிபர் தேர்தலில்...
இந்த வார இறுதியில் அமெரிக்காவிலிருந்து பான் கீ மூன் தென் கொரியா செல்லவிருக்கிறார். அதன்பின்னர் தென் கொரிய அதிபர் தேர்தலில் போட்டியிட பான் கீ மூன் விண்ணப்பம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் இன்னமும் உறுதி செய்யவில்லை.


லஞ்ச வழக்கு
இந்நிலையில் பான் கீ மூனின் சகோதரர் மற்றும் உறவினர் மீது மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பானின் செய்தியாளர் கூறுகையில் "இதுகுறித்து பான்க்கு ஒன்றும் தெரியாது. இந்த குற்றச்சாட்டினை செய்திகள் வழியாகவே அவர் தெரிந்து கொண்டார்" என்று கூறியிருக்கிறார்.

பின்னடைவு
உறவினர்கள் மீதான லஞ்சப் புகாரால் தென்கொரிய அதிபர் தேர்தலில் நின்றாலும் பான் வெற்றி பெறுவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. மேலும், நீண்ட காலமாக தென் கொரியாவை விட்டு வெளிநாடுகளில் பான் தங்கியிருந்தது, எந்த அரசியல் கட்சியிலும் பான் இல்லாதது ஆகியவை அவருக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: