ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் அசாருதீன் போட்டி

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      விளையாட்டு
Mohammad Azharuddin 2017 1 11

ஐதராபாத் : ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன் போட்டியிடுகிறார்.

வாழ்நாள் தடை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். 1985-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி இந்திய அணியில் அறிமுகமான அவர், 2000-ம் ஆண்டு ஜூன் 3-ந்தேதி வரை இந்திய தேசிய அணிக்காக விளையாடினார். 2000-ல் மேட்சி பிக்சிங்கில் ஈடுபட்டதாக அவருக்கு பி.சி.சி.ஐ. வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து அசாருதீன் கோர்ட்டில் முறையிட்டார்.


கோர்ட் தள்ளுபடி

அவர் மீதான குற்றச்சாட்டை 2011-ம் ஆண்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இருந்தாலும் பி.சி.சி.ஐ. அவர் மீதான தடையை நீக்கவில்லை. டெல்லியில் கடந்த சீசனில் நடைபெற்ற ரஞ்சி போட்டியின்போது மைதானத்திற்கு வெளியே பவுண்டரி கோடு அருகில் விதர்பா வீரர்களிடம் அசாருதீன் பேசிக் கொண்டிருந்தார். இதற்கு பி.சி.சி.ஐ. கடும் கண்டனம் தெரிவித்து டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியது.

அதிரடி மாற்றம்

கடந்த 3-ம் தேதி உச்சநீதிமன்றம் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் மற்றும் செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அதிரடியாக நீக்கியது. அதன்பின் லோதா கமிட்டி பரிந்துரையின்படி மாநில கிரிக்கெட் சங்கங்களின் அதிகாரிகள் பதவி இழந்து வருகிறார்கள். ஒரு மாநில சங்கத்தின் தலைவர் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும் என்று லோதா கமிட்டி பரிந்துரை செய்துள்ளதால், ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான அர்சாத் ஆயுப் பதவி விலக வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அசாருதீன் மனுதாக்கல்

இந்நிலையில் அந்த பதவியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அசாருதீன் மனுதாக்கல் செய்துள்ளார். மனுதாக்கல் செய்தபின் அசாருதீன் கூறுகையில் ‘‘கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்காததே ஐதராபாத்தின் பிரச்சினையாக உள்ளது. ரஞ்சி டிராபியில் நாம் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தைதான் பெற்றுள்ளோம். என்னுடைய அடிப்படை நோக்கமாக எதை பார்க்கிறேன் என்றால், ஐதராபாத்தை கிரிக்கெட்டில் உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். கிரிக்கெட் சிறந்த வகையில் செல்ல வேண்டும் என்றுதான் உண்மையிலேயே விரும்புகிறேன். ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தை திடீர் ஆசையினாலோ, தனிநபர் விருப்பத்திற்கோ நடத்த முடியாது.

கிரிக்கெட்டை வளர்க்க ...

மாவட்ட அளவில் கிரிக்கெட் வளர்க்க விரும்புகிறேன். ஏனென்றால், கடுமையாக உழைக்கும் வீரர்கள் மாவட்டத்தில் இருந்துதான் வருகிறார்கள். நாம் ஏராளமான வீரர்களை உருவாக்கியுள்ளோம். ஆனால், தற்போது இந்திய அணியில் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை. கிரிக்கெட்டிற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: