காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வல்லுநர்களின் மனநலம் பற்றிய சிறப்புரை நிகழ்ச்சி

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      சிவகங்கை
ka

 காரைக்குடி:-  காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக சிறப்புக் கல்வி மற்றும் புணர்வாழ்வு அறிவியல் துறை சார்பாக சர்வதேச வல்லுநர்களைக் கொண்டு மனநலம் பற்றிய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று மதியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு துணைவேந்தர் சொ.சுப்பையா அவர்கள் தலைமை ஏற்று உரையாற்றினார். மாணவர்களின் உடல்நலத்தோடு மனநலமும் ஒருங்கிணையும்போது அவர்கள் வாழ்க்கையில் சவால்களை திறம்பட சமாளிக்க முடியும். மனநலம் என்பது மற்றவர்களுடைய எண்ணங்களையும், செயல்களையும் புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு தங்களுடைய செயல்களை மாற்றியமைத்து தினசரி வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருப்பதாகும். இத்தகைய சர்வதேச வல்லுநர்களின் சிறப்புரைகள் மாணவர்களிடையே சிறந்த மனநலத்தை உருவாக்க அடிகோலும் எனத் தெரிவித்தார்.

 மாநில மனநல திட்ட அலுவலர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் “வெற்றியை நோக்கி” என்ற தலைப்பில் அற்பணிப்பு, பக்தி மற்றும் உறுதியுடன் கூடிய உழைப்பு ஒரு மனிதனை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் என்று குறிப்பிட்டார். ஆஸ்திரேலியா குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழக மூத்த மனநல ஆலோசகர் மற்றும் விரிவுரையாளருமான டாக்டர். சோமன் இளங்கோவன் நேர்மறை மனநலத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவான சிறப்புரை வழங்கினார். சிறந்த மனநலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவும் என எடுத்துரைத்தார்.

 இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் முனைவர் ஜெ. சுஜாதாமாலினி வரவேற்றார். இத்துறைச் சார்ந்த ஆராய்ச்சி உதவியாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிகான ஏற்பாட்டினை முனைவர் க. குணசேகரன் செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: