முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்றிக் காய்ச்சல் பீதி அடைய தேவையில்லை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி,

 

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியை சேர்ந்த இருளர் காலனியில் 3 பேர் மர்ம காய்ச்சல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு எச்1என்1 வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் புதுகும்மிடிப்பூண்டி இருளர் காலனி பகுதிக்கு புதன்கிழமை ஆய்வு செய்ய வந்த தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பன்றிக் காய்ச்சல் குறித்து தமிழக மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கூறினார்.

 

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி இருளர் காலனியில் 13 குடும்பங்களை சேர்ந்த 58 பேர் வசித்து வரும் நிலையில் சீனிவாசன் (21), அங்கம்மாள் (58) ஆகியோர் திங்கள்கிழமை மாலையும், ரமேஷ் (30) செவ்வாய்க்கிழமையும் இறந்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த அனைவருக்கும் தொற்று நோய் அறிகுறி காணப்பட்டது.

 

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மோகனன், துணை இயக்குனர் ஜெ.பிரபாகரன் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவர் எஸ்.மோகனசுந்தரம் தலைமையில் 60பேர் கொண்ட சுகாதார குழுவினர் புதுகும்மிடிப்பூணடியில் முகாமிட்டு நோய் தொற்று பரவாம் இருக்கவும், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் புதுகும்மிடிபூண்டியில் மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி, பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் வருகை தந்தனர்.

 

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பாதிக்கப்பட்ட இருளர் காலனி பகுதி மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிராம சேவை மைய கட்டிடத்திற்கு வந்து அவர்களுசன் பேசி ஆறுதல் கூறினார். தொடர்ந்து இருளர் காலனி பகுதியில் உள்ள குடிசைகளை ஆய்வு செய்து, சுகாதார துறையினரின் மருத்துவ முகாமை பார்வையிட்டதோடு, அப்பகுதியில் உள்ள அருள்ஜோதி மழலையர் பள்ளிக்கு சென்றார். அங்கு மாணவர்கள் தொற்று பரவாமல் இருக்க கைக்கழுவும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்பதை செயல்முறையில் செய்து காட்டயதை பார்வையிட்டார்.

 

தொடர்ந்து நிகழ்வில் பேசிய அமைச்சர் புதுகும்மிடிப்பூண்டியில் மர்ம காய்ச்சலால் 3 பேர் மரணடைந்த நிலையில் தொடர்ந்து சுகாதார துப்புரவு பணிகளை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஐவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திர பாபு, கெளரி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார துறையினர் சிறப்பாக பணிபுரிந்து மேற்கண்ட பகுதியில் தொற்று நோய் பரவாமல் பல்வேறு தடுப்பு முறைகளை சிறப்பாக செய்துள்ளமைக்கு பாராட்டு தெரிவித்து, இப்பணிகள் இன்னும் இரண்டு மூன்று நாட்கல் தொடர்ந்து நடக்கும் என்றார்.

 

மேலும் அவர் பேசுகையில் புதுகும்மிடிப்பூண்டி இருளர் காலனி பகுதியில் 3பேர் காய்ச்சல் காரணமாக மரணம் அடைந்த நிலையில், இப்பகுதியை சேர்ந்த 13 பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், 13 பேர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் ஒரு குழந்தைக்கு எச்1என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சலுக்கான நோய் குறியீடு கண்டறியப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

பன்றிக் காய்ச்சலை குறித்தெல்லாம் மக்கள் கவலைப்பட தேவையில்லை, அதற்கான அறிகுறி காணப்படும் போது அதனை குணப்படுத்தும் மருந்துகள், தேவைக்கு அதிகமாகவே சுகாதார துறையினரிடம் உள்ளது. இந்த காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து, ரயில் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், சந்தைகள், அனைத்து மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

 

காய்ச்சல், சளி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் உள்ள நபர்கள் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையையோ அல்லது உரிய மருத்துவரையோ அனுகி முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினார்.

 

மேலும் தனியார் மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சல் நோய் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை வழங்கும்போது அரசு வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளவாறு மட்டுமே பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளபடவேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். பன்றிக்காய்ச்சல் நோய் பரவுவதை தவிர்க்க தும்பும்போதும் மற்றும் இரும்பும்போதும் மூக்கு மற்றும் வாயினை துணியைக் கொண்டு மூடுதல், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு நன்கு கழுவுதல் போன்ற சுகாதாரமான பழக்க வழக்கங்களை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் நோய் கட்டுப்படுத்த தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது. இது ஒரு குணப்படுத்தக் கூடிய காய்ச்சல் தான் எனவே பொது மக்கள் யாரும் பன்றிக்காய்ச்சல் குறித்து பீதியோ பதற்றமோஅடைய தேவையில்லை என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்