முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணா நீரை தொடர்ந்து திறக்க சந்திரபாபு நாயுடுவிடம் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நேரில் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமாகாமல் தடுக்க, கிருஷ்ணா நீரை தொடர்ந்து திறந்து விட வேண்டும் என தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விஜயவாடாவில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். தமிழக முதல்வரின் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆந்திர முதல்வரும் அப்போது உறுதியளித்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றி

தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விஜயவாடா சென்று சந்தித்தார். வடகிழக்கு பருவ மழை பொய்யத்ததால் கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்து விடக்கோரி வலியுறுத்துவதற்காக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அங்கு சென்றார்.
இந்த சந்திப்பின் போது, முதல்வர் ஜெயலலிதா மறைவு துயரத்தில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. போற்றுதலுக்குரிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறுதி சடங்கின் போது கலந்து கொண்டு, தமிழக மக்களின் துயரங்களை பகிர்ந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அப்போது முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

சென்னை நகர மக்களின் குடி நீர் தேவைக்காக தமிழகம் விடுத்த வேண்டுகோளை உடனடியாக ஏற்று, கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட்ட ஆந்திர முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இரு மாநிலங்களின் நல் புரிந்துணர்வு காரணமாகவே இது சாத்தியமாயிற்று என்றும் அவர்  தெரிவித்தார். இந்த மாதம் 9-ம் தேதியன்று கண்டலேறு அணையில் இருந்து தண்ணீரை உடனடியாக திறந்துவிட்ட ஆந்திர மாநில அதிகாரிகளுக்கும்  தமிழக முதல்வர் நன்றி தெரிவித்தார்.

குடிநீர் தேவை

தமிழக மாநிலம் வட கிழக்கு பருவ மழையை நம்பியே உள்ளது. நடப்பு சீசனில் வட கிழக்கு பருவமழை பொய்த்து போனதால் மாநிலம் வறட்சி மாநிலமாக ஆகியுள்ளது. சென்னை மாநகரம்  வடகிழக்கு பருவமழையை குடிநீருக்காக அதிக அளவில் நம்பியுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 57  சதவீதம் குறைவாக சென்னை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம்  வார்தா புயல் சேதப்படுத்திய போதும், அதிக அளவில் மழை பெய்யவில்லை. சென்னை குடிநீருக்கு 4 நீர் தேக்கங்களில் தண்ணீர் தேக்கிவைக்கப்படுகிறது.

கிருஷ்ணா நீர் ஒப்பந்தம் 

இந்த நீர் தேக்கங்களின் கூட்டு குடி நீர் திறன் 11.057 கன அடியாகும். ஆனால் தற்போது இந்த நீர் தேக்கங்களின் மொத்த குடி நீர் இருப்பு  1.504 கன அடியாக உள்ளது. மிக குறைவாக உள்ள இந்த தண்ணீர் குடி நீர் சப்ளைக்கு போதுமானது அல்ல. இதனால் சென்னை  குடி நீர் தேவைக்கு தெலுங்கு கங்கை திட்டத்தில் தண்ணீர் சப்ளை உறுதி செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. கிருஷ்ணா நீர் ஒப்பந்தம்  கடந்த 18-4-1983ம் ஆண்டு நிறைவேறியது. இதன் படி தமிழக எல்லையில், ஆண்டிற்கு 12 டி.எம்.சி தண்ணீர் சப்ளை செய்யப்பட வேண்டும். இந்த சப்ளையும் இரு கட்டமாக  மேற்கொள்ளப்பட வேண்டும். முதல் கட்டமாக 8கன அடி தண்ணீரை ஜூலை முதல் அக்டோபர் வரையிலும் இரண்டாவது கட்டமாக ஜனவரி முதல்  ஏப்ரல் வரையிலான காலத்தில்  4 கன அடி நீரும் திறந்து விட வேண்டும்.

செலவினத்தை பகிர்ந்து கொள்ளுதல்

2015-16 ஆண்டில் தெலுங்கு கங்கை திட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வரவில்லை. 2016-17 ஆண்டில்  தமிழகம் 0.991 கன அடி நீரை மட்டும் பெற்றது. தமிழ்நாடு-ஆந்திர மாநிலம் சார்ந்த திட்டத்திற்கு செலவினத்தை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் உள்ளது. தமிழ்நாடு இதுவரை  ஆந்திர மாநில அரசுக்கு ரூ 687 கோடியை இந்த தண்ணீர் திட்டத்திற்காக செலுத்தியுள்ளது .

5 டி.எம்.சி தண்ணீர் வேண்டும்

தற்போது கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் 1000 கன அடி நீர் போதுமானதாக இல்லை. தற்போதைய தகவல்படி சோமசீல  நீர் தேக்கத்தில்  34.81டி.எம்சியும்,  கண்டலேறு நீர் தேக்கத்தில்  13.24 டி.எம்.சியும் உள்ளது.  எனவே ஆந்திர மாநில முதல்வர் கண்டலேறு அணையில் இருந்து  குறைந்த பட்சம்  5 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வரவிருக்கும் மாதங்களில் திறந்து விட வேண்டும் .தமிழகத்திற்கு இன்று (நேற்று) முதல் (12-1-2017) முதல் எந்த வித  இடையூறும் இல்லாமல் தண்ணீரை திறந்து விட அதிகாரிகளுக்கு ஆந்திர அரசு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவிடம் தெரிவித்தார்.

பரிசீலிப்பதாக உறுதி

அப்போது ஆந்திர  முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில்,

வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை . இருப்பினும் தமிழகத்தின் கோரிக்கையை பரிசீலிக்கிறேன் என உறுதியளித்தார். தமிழக, ஆந்திர முதல்வர்கள் சந்திப்பின் போது,  தமிழக  பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர மாநில வேளாண்துறை  அமைச்சர்  பிரதிபடி புல்ல ராவ், ஆந்திர மாநில மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  காந்த  சீனிவாச ராவ், தமிழக தலைமச்செயலாளர் கிரிஜா வைத்திய நாதன்,  தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், மற்றும் இரு மாநில உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இவ்வாறு தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்