முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாஜ்வாடியின் சைக்கிள் சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையம் முடிவு நிறுத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி  -  உத்தரப்பிரதேசத்தில் சமாஜ் வாடியின் எந்த அணிக்கு சைக்கிள் சின்னத்தை அளிப்பது என்ற முடிவைதேர்தல்  ஆணையம் நிறுத்திவைத்தது.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது முலாயம் சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். அவர் சிட்னி பல்லைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அவர் ஆட்சி நிர்வாகத்திலும், கட்சியிலும் பெரும்  மாற்றங்களை செய்து இருப்பதால் இளைஞர்கள் அவரது வழியை பின்பற்றுகிறார்கள். சமாஜ் வாடியில் உள்ள இளம் எம்.எல்.ஏக்கள்  அகிலேஷ் யாதவின் உத்தரவின் படியே செயல்படுவதால்  சமாஜ் வாடி கட்சியின் மாநில தலைவரும், முலாயம் சிங்கின் தம்பியுமான சிவ்பால் யாதவ்  அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்களை ஓரம் கட்டினார்.  இதனால் அகிலேஷூக்கும்  சிவ்பால் யாதவுக்கும் கருத்து மோதல் கடுமையாக ஆனது.

 இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வருகிற பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை 7 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட ஆளும் சமாஜ் வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் , காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியை தொடக்கியுள்ளன.
இந்த நிலையில் சமாஜ் வாடி கட்சியின் மாநில தலைவர்  சிவ் பால் யாதவ் தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதில்  அகிலேஷ் யாதவின் இளம் ஆதரவாளர்களான 50 எம்.எல்.ஏக்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அகிலேஷ் யாதவ் கட்சி தலைமைக்கு எதிராக போட்டி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதனால் கட்சி இரண்டாக உடைந்தது. கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக அகிலேஷ் யாதவும், அவரது சித்தப்பாவும் முலாயம் சிங்கின் மற்றொரு தம்பியுமான  ராம் கோபால் யாதவ் ஆகியோரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கி வைப்பதாக, முலாயம் அறிவித்தார். இந்த நீக்க உத்தரவு  24 மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்டு , இருவரும் கட்சியில் நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் அகிலேஷ் யாதவ் தனது சித்தப்பாவும், கட்சியின் பொதுச்செயலாளருமான ராம் கோபால் யாதவின் மூலமாக கட்சியின் தேசியக்கூட்டத்தை கூட்டினார். அந்த கூட்டத்தில், அகிலேஷ் யாதவ் சமாஜ் வாடியின் தேசிய தலைவராக தேர்வுசெய்யப்பட்டதுடன் சிவ்பால் கட்சி மாநில தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதனால் முலாயம் , அகிலேஷ் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. எனவே இருவரும் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்தை தங்களுக் கே அளிக்க வேண்டும் என டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார்கள். கட்சியின் 50 சதவீத எம்.பிக்கள் ,எம்.எல்.ஏக்களுக்கு மேல் ஆதரவு உள்ள அணிக்கே கட்சியின் சைக்கிள் சின்னம் கிடைக்கும்  என்ற நிலை இருந்தது. இதனால் அகிலேஷ் யாதவிற்கே  சைக்கிள் சின்னம் கிடைக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கும் முடிவை தேர்தல் ஆணையம் நேற்று அறிவிக்காமல் ஒத்திவைத்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 11 ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்