அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் சேர்க்கை பதிவு செய்திட நிரந்தர மையம்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக ஆதார் சேர்க்கை பதிவு செய்திட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு நிரந்திர ஆதார் மையமும், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் தலா ஒரு நிரந்திர ஆதார் மையமும் செயல்பட்டு வருகின்றன. ஆதார் பதிவிற்கு கட்டணம் ஏதுமில்லை. இது ஒரு கட்டணமில்லா சேவையாகும்.

ஏற்கனவே ஆதார் எண்ணிற்கென பதிவு செய்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வாயிலாக ஆதார் எண் வழங்கப்பெற்றவர்கள் ஒரு முறைக்கு மேல் எத்தனை முறை மீண்டும் மீண்டும் பதிவு செய்தாலும் புதிய ஆதார் எண் பெற இயலாது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மென்பொருள் அந்த பதிவுகளை நிராகரித்துவிடும். எனவே, ஆதார் எண் பெறுவதற்கு ஒரு முறை பதிவு செய்தாலே போதுமானதாகும்.

மேலும் ஆதார் அட்டைக்கு பதிவு செய்து ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் தங்களது ஆதார் எண்ணை தெரிந்துக்கொள்ள ஏதுவாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள மூன்று வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பிரத்யேக ஆதார் உதவிமையங்கள் 28.02.2017 முடிய தொடர்ந்து செயல்படும்.

ஆதார் எண் பெற்றவர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கும் அரசு இ-சேவை மையங்களில் காண்பித்து விரல்ரேகை பதிவு செய்து ரூ.30 மட்டும் கட்டணம் செலுத்தி கைக்கு அடக்கமான பிளாஸ்டிக் ஆதார் அட்டையாகவோ அல்லது ரூ.10ஃ- மட்டும் செலுத்தி காகிதத்தில் அச்சிட்டோ பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: