முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் 4 ஆண்டுகளாக நீட்டிப்பு:தமிழக மக்களுக்கு அரசின் பொங்கல் பரிசு

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்தில், சிறப்பு சிகிச்சைகளுக்கு அளிக்கப்படும் காப்பீட்டுத்தொகை ரூ.1.50 லட்சத்திலிருந்து, 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீட்டு திட்டம்
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில், தமிழ்நாடு அரசு, மக்கள் நல்வாழ்வுத் துறையில், ஏழை எளிய மக்களுக்காக என்னற்ற நலவாழ்வு திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் வழங்கப்படவேண்டும் என்பதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு மருத்துவ காப்பீட்டு அடையான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

பல லட்சம் பேருக்கு சிகிச்சை
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் காப்பீடும், குறிப்பிட்ட 77 நோய் வகைகளுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீடு வழங்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தில் 17.60 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் 3,615 கோடி ரூபாய் காப்பீட்டு செலவில் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு, 7.11 லட்சம் பயனாளிகளுக்கு 1,286 கோடி ரூபாய் காப்பீட்டு செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அறுவை சிகிச்சை
இத்திட்டத்தில் பெற்ற நிதியிலிருந்து, அரசு மருத்துவமனைகளுக்கு நவீன உபகரணங்கள் புதிய கட்டிடங்கள் மற்றும் பிற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அதிநவீன உயர் சிறப்பு சிகிச்சைகளான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காது வால் உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில், மாநில அரசின் பங்களிப்பு 35 கோடி ரூபாயுடன் தொகுப்பு நிதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபர்கள் எவ்வித செலவும் செய்யவேண்டியதில்லை. இதுவரை 4,300 நபர்கள், 318.42 கோடி ரூபாய் செலவில் சிறப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த திட்டத்திற்கு காப்பீட்டு நிறுவனத்துடனான உடன்படிக்கை 10-ம்தேதியுடன் முடிவடைகிறது. ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 16.06.2016 அன்று நிகழ்த்திய உரையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு இணங்க, இதற்கான அரசாணை 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த திறந்த ஒப்பந்தப் புள்ளி மூலம் அரசு சார்ந்த காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்காக ஒப்பந்தப் புள்ளிகளை வரவேற்று நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்வதற்கான அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு மிகக் குறைந்த பிரிமியம் 699 ரூபாய் என்று குறிப்பிட்ட யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை 10-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டு நிறுவனம், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை 11ம் தேதி முதல் நான்கு ஆண்டுகளுக்கு செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக ஆண்டு ஒன்றுக்கு 1,270 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

312 சிகிச்சை முறைகள்
11-ம் தேதி முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு தற்போது வழங்கப்படும் 1.50 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் முதல் முறையாக, தமிழ்நாட்டில் குடியேறி ஆறு மாதத்திற்குமேல் வசிக்கும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட புலம் பெயர்ந்தவர்கள் முறையான அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டு தொழிலாளர் நலத் துறை மூலம் சேர்க்கப்படுவார்கள். மாநில அரசால் அனாதைகள் என வரையறுக்கப்பட்டவர்களுக்கு, ஒவ்வொரு நபருக்கும் தனி காப்பீட்டு அட்டை வழங்கப்படும். தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை முறை தொடரப்படும். மேலும் மின்னனு முறையில் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து அச்சடித்துக் கொள்வதற்கான வழிமுறைகளும் இதில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் மையங்கள் தொடர்ந்து செயல்படும். தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம் உடன் இணைந்து பயனாளிகள் ஆதார் எண்ணுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்ந்து சிகிச்சை பெறலாம்
பயனாளிகள், தற்போதுள்ள திட்டத்தில் உள்ளது போலவே இத்திட்டத்திலும் தொடர்ந்து காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் மின்னனு அட்டை உபயோகித்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், சிகிச்சை பெறுவதில் வழிகாட்டுதலுக்கும், சிகிச்சை பெறுவதில் உள்ள சிரமங்களை சரி செய்யவும் மற்றும் புகார்களுக்கும், 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993 தொடர்பு கொள்ளலாம். தேவையிருப்பின், மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் உள்ள மாவட்ட கண்காணிப்பு மற்றும் குறை தீர்த்தல் செயற்குழுவிடம் புகார் தெரிவிக்கலாம். செயற்குழு முடிவின் மீது மேல் முறையீடு ஏதும் இருப்பின், தமிழ்நாடு அரசு சுகாதாரத் திட்ட, திட்ட இயக்குநர் தலைமையில் உள்ள மாநில கண்காணிப்பு மற்றும் குறைதீர்த்தல் செயற்குழுவிடம் மேல் முறையீடு செய்யலாம்.

பொதுமக்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் எந்த செலவுமின்றி, கட்டணமில்லாமல் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்