முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக செயல்பட அமெரிக்கா - கியூபா முடிவு : புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்காவும், கியூபாவும் தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றுக்கு எதிராக இணைந்து செயலாற்ற புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

பரம எதிரிகள்
அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது.

கியூபாவுடன் நட்பு
கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. அதேபோன்று கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவுக்கு சென்றார்.

இருநாட்டு நல்லுறவு
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பியான தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை, ஒபாமா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிடல் காஸ்ட்ரோ மறுப்பு
உடல்நலம் குன்றிய நிலையில் சக்கர நாற்காலியின் துணையின்றி நடமாட முடியாத நிலையில் இருக்கும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ - ஒபாமாவை சந்தித்துப் பேச மறுத்து விட்டார். எனினும், கியூபாவுடன் உள்ள தீராப்பகையை தனது பதவிக்காலத்தில் முடிவுக்கு கொண்டுவந்தே தீரவேண்டும் என்று திட்டமிட்டுள்ள அமெரிக்க அதிபர் கியூபாவில் அமெரிக்க தூதரகத்தை திறக்க ஏற்பாடு செய்துள்ளார்.

உடனடி குடியுரிமை
இந்நிலையில், அமெரிக்க அரசால் நீண்டகாலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் கியூபா தொடர்பான வெளியுறவு கொள்கையில் தற்போது மாற்றம் செய்துள்ள அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவில் ஓராண்டு காலம் வசிக்கும் கியூபா மக்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படும் என நேற்று முன்தினம் அறிவித்தார். கடந்த 20 ஆண்டுகாலமாக நிலவிவரும் நடைமுறையின்படி எல்லை வழியாக அமெரிக்காவுக்கு வரும் கியூபா நாட்டினர் அங்கு தங்கியிருக்க அனுமதிக்கப்படுகின்றனர். கள்ளத்தனமாக கடல்வழியாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

புதிய ஒப்பந்தம்
இந்நிலையில், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல், கருப்புப் பணப் பதுக்கல் மற்றும் சர்வதேச கிரிமினல் குற்றங்கள் போன்றவற்றுக்கு எதிராக இணைந்து செயலாற்ற கியூபாவும் அமெரிக்காவும் புதிய ஒப்பந்தத்தில் நேற்று முன்தினம் கையொப்பமிட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேசிய துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் பெருந்துணையாக இருந்ததாக கியூபா அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்