முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை பிரகடனம் செய்ய வேண்டும் பிரதமருக்கு வைகோ கடிதம்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜல்லிக்கட்டு நடத்த சட்ட வல்லுநர் களை ஆலோசித்து உடனடியாக அவசர சட்டத்தை பிரகடனம் செய்ய வேண்டும் என்றும், தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் விபரீதம் ஏற்படும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று காலை பிரதமருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் கடிதத்தில் அவர் கூறியிருப்பது வருமாறு:-

கடந்த ஒரு மாத காலமாகவே, தமிழ் நாட்டில் விவசாயிகள், குறிப்பாக இளைஞர்கள், அதிலும் குறிப்பாக மாணவர்கள், ஜல்லிக்கட்டு போட்டி யின் மீது உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்குவதற்கு தக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2016 டிசம்பர் 15-ம் தேதியன்று, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தங்களைச் சந்தித்து, ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு குறித்து விரிவாக விளக்கினேன். இந்த விளையாட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்களின் கலாச்சார நிகழ்வாக நடத்தப்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டு காளைகளை வீடுகளில் விவசாயிகள், தங்கள் பிள்ளைகளைப் போலப் பராமரிக்கின்றார்கள். ஜல்லிக்கட்டு நடக்கின்றபோது, தோற்றப்பொலிவான வீரமிக்க காளைகள், தங்கள் அருகில் வந்து, திமிலைத் தழுவ நெருங்குகின்றவர்களைத்தூக்கி எறிந்து விட்டு ஓடும். அதனால் தான் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழ் இலக்கியத்தில் ‘ஏறு தழுவுதல்’ எனக் குறிப்பிட்டனர்.

இந்தப் பிரச்சினையில் உண்மைக் குற்றவாளியான திமுக தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகின்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்களத்தில், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பழியை இன்றைய மத்திய-மாநில அரசுகள் மீது போட்டு, தனக்கு அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்றது. இந்தப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட பிறகும், தீர்ப்பை வெளியிடாமல் நிறுத்தி வைத்து இருக்கின்றது.

அதனால், மத்திய அரசு ஜல்லிக்கட்டை அனுமதிக்க அவசரச் சட்டம் கொண்டு வருவதற் குத்தயங்குவதாக அறிகின்றேன். இத்தகைய சூழ்நிலையில், தாங்கள் சட்டவல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து, உடனடியாக ஒரு அவசரப் பிரகடனத்தின் மூலம், கொடிய விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றிக்கொள்ளலாம். இந்தப் பிரச்சினையில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நிலைமை விபரீதமாகி, பின்னர் நடைபெறும் போராட்டம் அரசாங்கத்தால் அடக்க முடியாத அளவுக்கு எல்லை மீறி விடும் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியது என்னுடைய கடமை என்பதால் இதனை எழுதி இருக்கின்றேன். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்வீர்களானால், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டும் அல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்