முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டை நெறிமுறைப்படுத்தும் புதிய சட்டத்தை சிறப்பு சட்டசபைக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் : மு.க. ஸ்டாலின் கோரிக்கை

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

சென்னை  -  ஜல்லிக்கட்டை நெறிமுறைப்படுத்தும் புதியதொரு சட்டத்தை, தமிழக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.  இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ''ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது'' என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம்  தெரிவித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இப்படியொரு சூழ்நிலை உருவாகக் கூடாது என்பதற்காகவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும், போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரநிதிகளையும் அழைத்துக் கொண்டு சென்று பிரதமரை சந்தித்து முறையிடுமாறு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தேன்.

அனைத்துக் கட்சிப் பிரநிதிகளையும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரநிதிகளையும் அழைத்துச் சென்றிருந்தால் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை பிரதமரிடம் வெளிப்படுத்தியிருக்க முடியும். தமிழர்களின் கலாச்சாரத்தைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இன்றைக்கு மத்திய- மாநில அரசுகளின் மெத்தனத்தைப் பார்த்து கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். சென்னை மெரினா கடற்கரை மட்டுமின்றி தமிழகமெங்கும் தன்னெழுச்சியுடன் மாணவர்களும், மக்களும் நடத்தும் போராட்டத்தின் உணர்வுகளை மத்திய அரசு உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது.
ஆகவே தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம்  இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். அதனைத் தொடர்ந்து நாளைக்கே ( இன்று)  சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தையும் கூட்டி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான சட்டபூர்வ நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையையும் பெறலாம்.

பிரதமர் நரேந்திரமோடி, ''மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவி செய்யும்'' என்று முதல்வருடான சந்திப்பில் தெரிவித்ததாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.  பிரதமரின் இந்த உறுதிமொழியை துணைக்கு வைத்துக் கொண்டு, ஏற்கெனவே ஜல்லிக்கட்டு தொடர்பாக 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பிரபல சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, அந்த தீர்ப்பில் திமுக அரசின் ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டத்தில் ஏதேனும் குறைகள் சுட்டிக்காட்டப் பட்டிருப்பின் அதையும் நிவர்த்தி செய்து புதியதொரு ஜல்லிக்கட்டு நெறிமுறைப்படுத்தும் சட்டத்தை, தமிழக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்