முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டுக்கா மல்லுக்கட்டி தமிழகம் முழுவதும் கொட்டும் மழையிலும் நடந்த மாணவர்களின் எழுச்சி போராட்டம்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - ஐல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வை மத்திய அரசு காண வலியுறுத்தியும்,பீட்டா அமைப்பை  தடைசெய்யக் கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் நீடிக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டு அறவழியில் தங்கள் உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பீட்டா அமைப்புக்கு  தடை :

தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்- தமிழர்களின் கலாச்சாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியரும், இளைஞர்களும் தன்னெழுச்சியுடன் பங்கேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பி அறவழியில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தஞ்சை, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் சென்னை மெரினாவில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மாணாக்கர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்கள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். ஐல்லிக்கட்டின் மீதான தடையை நிரந்தரமாக நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்கு ஏற்றவாறு உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பீட்டா அமைப்பை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் என்று கோரி வருகின்றனர். இதனிடையே, வெயில் கடுமையாக உள்ளதால், போராட்டக் களத்திற்கு குழந்தைகளை அழைத்து வரவேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் போராட்டம்:

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் அறவழிப்போராட்டம் மற்றும் அமைதிப் பேரணி உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாணவ - மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் மறியல்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, மதுரை ரயில் நிலையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.  இதேபோல், தமுக்கம் மைதானத்தில் திரளாக குவிந்த இளைஞர்கள், பெண்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கொட்டும் மழையில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பீட்டா அமைப்புக்கு எதிரான பதாகைகளை ஏந்தி, கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

பெண்களும் முழக்கம் :

ஜல்லிக்கட்டுக்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பீட்டா அமைப்பை தடை விதிக்க வலியுறுத்தி மாணவர்கள், பெண்களும் முழக்கம் எழுப்பினர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக அவசர சட்டம் இயற்றிய தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் நன்றி தெரிவித்தனர்.

மீனவர்கள்  ஆதரவு :

தூத்துக்குடி மாவட்டத்தில் 5வது நாளாகஇளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு ஆதரவாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  தேனி மாவட்டம் கூடலூரில் ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு உடனடி சட்ட திருத்தம் கொண்டு வரக் கோரி, விவசாயிகள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனுமதி கிடைக்கும் வரை தங்களின் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் தொடர்ந்து நடத்த, மத்திய அரசு நிரந்த தீர்வு காண வேண்டும் எனக் கோரி திருவாரூரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு, பகலாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அஞ்சல் துறை ஊழியர்கள் போராட்டம் :

நாகை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் துறை ஊழியர்கள் பீட்டா அமைப்புக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். மேலும் பீட்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 5வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வர்த்தகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

நெல்லை - குமரயில் போராட்டம் :

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்துக்கு ஆதரவாக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில், உள்ள விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் இளைஞர்களுக்கு ஆதரவாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  திருச்சி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பை இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.  திருப்பூரில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் 5-ஆவது நாளாக கல்லூரி 10 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொட்டும் மழையில் ...

ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து கிருஷ்ணகிரி உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிகட்டை விரைந்து நடத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.  தஞ்சை தபால் நிலையம் முன்பு கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் 5வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாத போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என சூளுரைத்தனர்.  ஈரோடு வ.உ.சி மைதானத்தில் 4வது நாளாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கக் கோரி புதுச்சேரி மாநிலத்தில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பீட்டா அமைப்புக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பினர்.  இதேபோல், கொக்கு பூங்கா அருகே மாட்டுவண்டி தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர்.

மதுரையி்ல் இன்று ஜல்லிக்கட்டு :
மதுரையில் அலங்காநல்லூர் , பாலமேடு, அவனியாபுரம், ஆகிய  பகுதிகளில் இன்று காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும். என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று ஜல்லிக்கட்டு நடப்பது உறுதியாகிவிட்டது.  வாடிவாசல் திறந்ததும் மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் வீடு வாசலுக்கு திரும்புவதும் உறுதியாகிவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்