முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவசர சட்டம் இன்று அமலாகிறது: நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்பார்ப்பு

சனிக்கிழமை, 21 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை   - தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீர வேண்டும் என்று இளைஞர்களும், மாணவர்களும் சிலிர்த்தெழுந்து நடத்திய கட்டுக்கோப்பான போராட்டத்துக்கு மத்திய - மாநில அரசுகள் பணிந்துள்ளன. மாணவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக நேற்று வெடித்ததால் மத்திய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்து அவசரச் சட்டம் கொண்டு வருவதை உறுதி செய்தன.ஜல்லிக்கட்டு போட்டியை இடையூறு இல்லாமல் நடத்துவதற்கு தேவையான அம்சங்களை கொண்ட சட்ட முன் வரைவை தமிழக அரசின் 5 உயர் அதிகாரிகள் மேற்கொண்டனர். முதலில் அந்த அவசர சட்ட முன் வடிவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்டது. அதைப் படித்து பார்த்து ராஜ்நாத்சிங் கையொப்பமிட்டு ஒப்புதல் வழங்கினார்.இதையடுத்து அந்த சட்ட முன் வடிவு சட்ட அமைச்சகத்துக்கும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த 2 அமைச்சகங்களும் தமிழக அரசின் சட்ட முன் வடிவை அப்படியே ஏற்றுக்கொண்டு அளித்தன. மத்திய அரசின் மூத்த வக்கீல் அட்டர்னி ஜெனரல் முகுல்ரோத்கியும் தமிழக அரசின் சட்ட முன் வடிவை முழுமையாக படித்துப் பார்த்து தனது பரிந்துரைகளை தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவைகளின் ஒப்புதலைத் தொடர்ந்து அந்த அவசரச் சட்ட முன் வடிவு ஜனாதி பதி ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இது மாநில விவகாரம் தொடர்பான அவசரச் சட்டம் என்பதால் ஜனாதிபதி ஒப்புதல் பெறத் தேவை இல்லை என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.ஜனாதிபதியின் பார்வைக்கு அந்த அவசரச் சட்டத்தின் நகலை மட்டும் அனுப்பி வைத்தால் போதும் என்றும் கூறப்பட்டது. மேலும் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு மத்திய உள்துறையிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டது.
நேற்றிரவே அந்த அவசரச் சட்டத்துக்கான கோப்பு தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தது. இனி அந்த கோப்பில் கவர்னர் கையொப்பமிட வேண்டும். தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 4 மணிக்கு சென்னை வர உள்ளார்.

அதன் பிறகு அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார். இதையடுத்து அவர் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தில் கையொப்பமிடுவார். கவர்னர் அலுவலக நடைமுறைகள் முடிவடைவதற்கு சுமார் 2 மணி நேரங்கள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இன்று மாலை 6 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவசரச் சட்டத்தில் கையொப்பமிட்டால் தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிய வரும். அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை பங்கேற்க வகை செய்யும் அறிவிக்கையை தமிழக அரசு அதிகாரப் பூர்வமாக முறைப்படி வெளியிடும்.அந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதும் ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்து விடும். எனவே மாணவர்களும், இளைஞர்களும் எதிர்பார்த்த அவசரச் சட்டம் இன்றே நடைமுறைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக அரசின் அவசரச் சட்டம் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. நாளையே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்